Friday, June 1, 2007

பயணம்

பின்னோக்கி நகரும்
மரங்கள்
முன்னோக்கிச் செல்லும் என்
சாலைப் பயணத்தை
சமிக்ஞை செய்கின்றன...

கடந்ததையும்
கடக்கப் போவதையும்
நினைக்கின்ற பொழுது
நடந்து கொண்டிருப்பவை
தூரத்திலிருந்து நோக்கும்
ஒரு புள்ளியாய்...

மௌனங்கள் கண்டிராத
ஆர்ப்பாட்ட இரவுகள்
ஆழ் மனதில்
இப்போதும் நிழலாடுகின்றன
விலைபோகும் எனில்
அந்த கனவுகள்
விற்பனைக்கு

உழைக்க மறுப்பவனின்
உடலை
ஆறடி நிலம்கூட
அங்கீகரிப்பதில்லை
என்கிற உண்மை
இன்றும் கூட
உதாசீனப்டுத்தப்படுகிறது

நாடகங்களக்கிப்போன
நடைமுறை வாழ்க்கையில்
ஊடகங்கள் ஒருநாளும்
ஒழுக்கத்தை
வெளிக்கொணர்வதில்லை

ஏட்டுக் கல்வி மூலமும்
கேட்டறியவும் மட்டுமே
முடிகிறது
கூட்டுக் குடும்பங்களின்
மகத்துவத்தை

தனித்தோ
துணையுடனோ
அர்த்தமற்றதாய் இருந்தாலும்
அனிச்சையாய்
தொடரவே செய்கின்றன...
வாழ்க்கைப் பயணங்கள்

பயணங்கள் என்னவோ
பசுமையாகத்தான் இருக்கின்றன
எதையும் ஏற்றுக்கொள்கின்ற
பக்குவம் இருப்பதால்
பாதைகள்தான்
வெறிச்சோடிக்கிடக்கின்றன
பாலைவனங்களாய்...
--நாவிஷ் செந்தில்குமார்

1 comment:

Anonymous said...

நாடகங்களக்கிப்போன
நடைமுறை வாழ்க்கையில்
ஊடகங்கள் ஒருநாளும்
ஒழுக்கத்தை
வெளிக்கொணர்வதில்லை

really superb!

Thanks
Ravi