Tuesday, June 29, 2010

தாகம்

தண்ணீர்த் தொட்டியில்
தெரிந்த வானத்தில் இருந்த
மேகத்தைக் கொத்திக் கொத்தி
தாகத்தைத் தீர்த்துக்கொண்டது
காகமொன்று!
00
மீண்டும் சேர்த்துக்கொள்ள வேண்டி
மரத்தின் காலடியில்
என்ன சொல்லி
கெஞ்சியழுகின்றன
உதிர்ந்த சருகுகள்?
00
அனுமதி பெறாமலே
வீடு நுழைந்து
நாற்காலியிலமர்ந்திருந்த வெயில்
ஜன்னல் கதவுகளடைத்துத் திரும்புவதற்குள்
சொல்லிக்கொள்ளாமல்
எந்த வழியாக
வெளிச்சென்றிருக்கும்?
00
விளையாடிக் களைத்து
வீடு திரும்பும் குழந்தையின்
பிரிவைத் தாங்காத கடல்
ஓடிவந்து பேரலையடித்து
கால் நனைப்பது தவிர
எப்படி உணர்த்தும்
குழந்தையின் மீதான
பிரியத்தை?
00
பேருந்து என் ஊரை
அடைந்த நேரத்தில்
எந்த ஊரைச்
சென்றடைந்திருக்கும்
எதிர்த்திசையில்
ஓடிய மரங்கள்?

Friday, June 25, 2010

மூன்று கவிதைகள்

நிராகரிப்பு
*****************************************
வீட்டருகே தேங்கியிருந்த
மழைநீரில்
குழந்தையின்
நிராகரிப்பின் சுமை தாங்காது
அமிழத்தொடங்கிய
அழுக்கேறிய
பழைய பொம்மையை
எடுத்து
பிரியங்களுடன்
அணைத்துக்கொண்டேன்…
அழத்தொடங்கியது
பொம்மை.
00
சமையல் குறிப்பு
*****************************************
இருநூறு மில்லி
ஆவின் பாலில்
இரண்டு தேக்கரண்டி
சர்க்கரை கலந்து
வெதுவெதுப்பான சூட்டிலே
காயவிட்டு
வெண்மை மாறுமுன்
இறக்கிவிட்டால்
தாய்ப்பால் தயார்.
00
வானவில்
*****************************************
பென்சிலைக் கொடுத்து
வானவில்
வரையச் சொன்னேன்
குழந்தையிடம்
ஏழு வண்ணங்களுக்கு
என்ன செய்கிறாளென்ற
எதிர்பார்ப்போடு…
மழையை வரைந்துவிட்டு
நிற்கும்வரை காத்திரு
வானவில் வருமென்றாள்!
--நாவிஷ் செந்தில்குமார்

Tuesday, June 1, 2010

குழந்தைகள் உலகம்

பொருட்களைக் கலைத்துப்போட்டு
விளையாடும் குழந்தை
கோடை விடுமுறைக்கு
பாட்டி வீட்டிற்கு
சென்றதிலிருந்து
தானே கலைத்து
தானே கூட்டி
நாட்களைக் கடத்துகிறாள்
அம்மா.

ரயிலில்
சாப்பாடு ஊட்டிக்கொண்டிருந்த
அம்மாவிடம் கேட்காமலே
ஒரு கை உணவை எடுத்து
என்னை நோக்கி
'ஆ...' என்றது குழந்தை.
இன்றுவரை
மென்று கொண்டிருக்கிறேன்
அந்த நிகழ்வை...

அழைப்புமணியை
அழுத்திவிட்டு
ஓடி ஒளியும் சிறுமி
தவறிவிழுந்து காயம்பட்டதிலிருந்து
யார் வந்து அழைத்தாலும்
தாமதமாகவே
கதவு திறக்கிறேன்.

ஆட்கள் குறைவாக இருந்ததால்
ஆட்டத்தில்
என்னையும் சேர்த்துக்கொண்ட
குழந்தைகள்
எனது பால்யத்தை
மீட்டெடுப்பதற்குள்ளாக
ஆடத் தெரியவில்லையென
நீக்கிவிடுகிறார்கள்.

அலுவலகம் விட்டு வரும்
பெற்றோரை
ஐந்து மணியிலிருந்து
எதிர்பார்த்து ஏமாந்து
உறங்கிப்போன குழந்தை
தேக்கிவைத்திருந்த முத்தங்கள்
இரவு ஒன்பது மணிக்கு
குட்டி வாயிலிருந்து
எச்சிலாக வடிகிறது.

கோடை விடுமுறையில்தான்
கோபித்துக்கொண்டு
வெளிச்சென்ற குதூகலம்
ஒவ்வொரு வீட்டுக்கும்
மீண்டும் குடிவருகிறது.

பின்னாலிருந்து
கண்களைப் பொத்தி
'கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்'
என்ற அனைகாவின்
பிஞ்சு விரல்களுக்கிடையே
இன்னும் இன்னும்
அழகாகத் தெரிந்தது
இந்த உலகம்.
--நாவிஷ் செந்தில்குமார்