Sunday, October 14, 2012

இந்தக் கோடை ஏன் சிலரை மட்டும் சுடுகிறது?

ஆறு பேர் அமரக்கூடிய
பெரியரக மகிழ்வுந்தொன்று
சிக்னலில் நிற்கிறது.

குழந்தையோடு

பிச்சை எடுக்கும் பெண்ணொருத்தி
மூடியிருக்கும்
அந்த வண்டியின்
கண்ணாடியைத் தட்டுகிறாள்.

‘இல்லை போ’ என்ற

சைகை மட்டுமே கிடைக்க
தட்டிக்கொண்டே இருக்கிறாள்…

வாகனத்தில் உள்ளே இருந்த

குழந்தையொன்று
இவள் கையிலிருக்கும்
குழந்தையைப் பார்த்து
புன்னகைத்தபடியே
உதடுகளைக் குவித்துக்கொண்டு
கண்ணாடியை நோக்கி
வருகிறது…

வெளியிலிருக்கும் குழந்தை

கண்ணாடியில் கன்னம் வைக்கும்
தருணத்தில்
உள்ளே இருக்கும் குழந்தையை
இழுத்துக் கொள்கிறாள்
ஒரு பெண்மணி.

பச்சை விளக்கு எரிந்ததும்

நகரும்  அந்த வண்டியின் பின்னால்
‘No Hand Signal’ என எழுதப் பட்டிருக்கிறது.

ஆனாலும்

கையசைத்து வழியனுப்புகிறது
கையிலிருக்கும்
குழந்தை!
    –நாவிஷ் செந்தில்குமார்
((ஆனந்த விகடனின் பிரசுரமானது)) 

Thursday, October 11, 2012

மரத்தைப் பிரசவிக்கும் பறவை

ஒரு மரத்தை
வெட்டும்போது
ஒரு பறவை
கதறும்
எரிச்சல்கொள்ளத் தேவையில்லை...

எங்கோ
ஒரு பழத்தை உண்டு
சிதைக்கவியலாத
அதன் விதையைச் சுமந்து
கழிக்கும்போது
மலவாய் கிழிந்து
பின்னது பயிராகி...
செடியாகி...
மரமாவதை
பார்த்து ரசித்திருந்தால்
நமக்கதன்
வேதனை புரியும்! 
           --நாவிஷ் செந்தில்குமார்
((ஆனந்த விகடனின் பிரசுரமானது))