Thursday, September 3, 2009

அப்பா

அப்பா...
வாழ்க்கை தந்த
உன் பெருமையை
எந்தக் கவிதையால்
சொல்லிவிட முடியும்?

உழைத்துக் களைத்த
உன் கை கால்களை
மிதிக்கச் சொல்வாய்...
அறியாத வயதில்
மிதித்ததை நினைத்து
இதயம் வலிக்குதப்பா!
இப்போதென்றால்
முத்தம் வைத்திருப்பேன்!

நீ அதிகம் கற்றதில்லை
என்பதாலே
கணக்குத் தெரியாதவனாய்
இருந்தாயோ?
எனக்குக் காசு கொடுக்கும்
போதெல்லாம்...

உனக்கு ஆடை வாங்கும்போது
விலையைப் பார்ப்பாய்!
எனக்கு மட்டும்
தரத்தைப் பார்ப்பாய்...

நீ வியர்வையில் எழுதிய
என் தலையெழுத்து
இன்று
குளிர்சாதன அறையில்
குளிரில் நடுங்குதப்பா!

என்னுடைய
வெற்றிகளுக்குப் பின்னால்
நீ இருக்கிறாய்!
தோல்விகளுக்குப் பின்னால்
உன் தோள் இருக்கிறது!

எனக்காக வாழ்கின்ற உனக்கு
எது வேண்டுமானாலும்
வாங்கித்தருவேன்!
செருப்பைத் தவிர...
காலமெல்லாம் உன்
கால்களுக்குச் செருப்பாக
நானேயிருப்பேன் அப்பா!

--நாவிஷ் செந்தில்குமார்

Friday, July 31, 2009

நண்பன்!

"சாப்பிட்டேன்" என
அம்மாவிடமும்
"கவலைப்பட வில்லை" என
அப்பாவிடமும்
"அடுத்த மாதத்திற்குள்
வேலை வாங்கிவிடுவேன்" என
அண்ணனிடமும்
"முதல் மாதச் சம்பளத்தில்
உனக்கொரு மடிக்கணினி" என
தங்கையிடமும் சொல்ல முடிந்தது...

"காலையிலிருந்து சாப்பிடல…
ரொம்பப் பசிக்குதுடா,
எதாவது வாங்கிக்கொடு"
என நண்பனிடம்
மட்டும் தான் கேட்க முடிந்தது...
--நாவிஷ் செந்தில்குமார்

Saturday, May 23, 2009

பூச்சியங்களுக்கு மதிப்பில்லை!

50
500 ஆகி - பின்
5000 என்றாகி,
50000 என
ஏறிக்கொண்டே போகிறது
ஈழத்தில்
இறந்த உயிர்களின்
எண்ணிக்கை!

இலக்கங்கள் கூடியும்
இரக்கமில்லையா
வல்லரசுகளே?

இடப்பக்கம் மட்டுமல்ல
ஈழத்தமிழன் என்றால்
வலப்பக்கம் வந்தாலும்
பூச்சியங்களுக்கு
மதிப்பில்லையோ?

Tuesday, April 7, 2009

பாட்டி இல்லாத வீடு

பாட்டி பாக்கு இடிக்கும்
சத்தமே - எங்களுக்கு
அதிகாலை எழுப்பும் மணி!

அப்பா அடிக்க
வரும்போதெல்லாம்
பாட்டியே எனக்குப்
பாதுகாப்பு வளையம்!

கண்ணாடி விளக்கோடு
காலைவரை
காவல் செய்வாள்
கன்றையும் மாட்டையும்!

ஆடு கோழி கூட
அவள் சொல்படிதான் நடக்கும்!
பள்ளிக்கே போகாதவள் அறிந்த
பாஷைகளோ பல...

கால்மேல் கால் போட்டு
யார் இருக்கக் கண்டாலும்
நினைத்துக் கொள்வேன்...
"அன்போடு கண்டிக்க
அவர்களுக்கு ஒரு
பாட்டி இல்லையோ?" என்று

திருநீறு பூசி உச்சி முகர்ந்து
சிறுபிள்ளையாய்
கையசைக்கும் பாட்டி
தாத்தா சாவிற்குப்பின்
நான் ஊருக்குக் கிளம்பும்
வேளைகளில்
எதிரே வராததில் இருக்கிறது
அவளது அறியாமையும்!
என் மேலுள்ள
அளவற்ற அக்கறையும்!

பாட்டியின் ஆசையே
என் திருமணத்தைப்
பார்ப்பதும்
பின் இறப்பதும் தான்!
காரணம் கேட்டால்
"செத்தால்தான்
உனக்குப் புள்ளையாகப்
பொறக்க முடியும்"
என்பாள் அந்த மகராசி!

கால ஓட்டத்தில்
இல்லாமல் போனது
மண்பானை சமையல்
மக்காச்சோளக்கூழ்
மரக்குதிர் மட்டுமல்ல!
தன் கைவைத்தியத்தால்
பல நோய்களை
எங்கள் வீட்டுப் பக்கமே
வராமல் செய்த
என் பாட்டியும்தான்!

பாட்டி கொடுத்த கசாயம்
அன்று கசந்தது
ஏனோ இன்று
இனிக்கிறது!

இப்போதெல்லாம்
அடிக்க ஓங்குகின்ற அப்பா
அழுதே விடுகின்றார்
தடுக்க வராத
தாயை நினைத்து...

தாத்தா பாட்டி இல்லாத வீடு
இக்காலப் பெற்றோருக்கு
வேண்டுமானால்
சுதந்திரமாய் இருக்கும்!
ஒருபோதும்
(பேரப்)பிள்ளைகளுக்கு
சொர்க்கமாய் இருக்காது!

--நாவிஷ் செந்தில்குமார்

Wednesday, April 1, 2009

குறைந்துபோன தாத்தா கவிதைகள்

இன்றோடு தாத்தா
இறந்து ஆண்டு
இரண்டாகிப் போனது!
கோயில் திருவிழாவில்
தாத்தாவின் தடந்தோளில்
பவனி வந்த நினைவு
இன்றும் பசுமையாய்…

தாத்தா இருந்தவரை
சாப்பாட்டு மீனில்
முள் இருப்பதே
தெரியாது எனக்கு!

இருநூறு கிலோ எடை விறகு
இருபது மைல்கள் தூரம்
அறுபது வயதில்
மனிதர் தினமும்
மிதிவண்டியில்
ஏற்றி வரும் கதை
இரண்டொரு மாடிக்கே
மின்தூக்கிக்காக காத்திருக்கும்
எனைப் போன்ற இளைஞனுக்கு
எப்போது போய்ச் சேரும்?

ஜல்லிக்கட்டு மாடு கிழித்த
தாத்தாவின் மார்புத் தழும்புதான்
ஏழு வயதிலேயே எனக்கு
மீசை வரைந்தது!

தாத்தாவின் இருமலில்
இசையை உணர்ந்தோம்!
அவர் மட்டும்
இரைச்சலாய் உணர்ந்தார்!
நாங்கள் தூக்கம் தொலைத்ததாக
நினைத்து
உயிர் தொலைத்தார்!

அவர் விரல் பிடித்து
நடந்த குழந்தை கவிஞனானது!
மனிதர் விட்டுச் சென்ற
வெற்றிடம் மட்டும்
நிரப்பப்படாமல்
வெறுமையாய்க் கிடக்குது.

பெருகிப்போன
முதியோர் இல்லங்களால்
குறைந்து போனது
குழந்தைகளின்
தாத்தாக்கள் மட்டுமல்ல!
தாத்தா கவிதையும்தான்!

–நாவிஷ் செந்தில்குமார்

Monday, March 30, 2009

குடித்த அப்பா... குடிகாத்த அம்மா!

"அடியே" என்று தொடங்கும்
அப்பாவின் அழைப்பொலியிலிருந்து
அம்மாவிற்கான
அடுத்த யுத்தம்
தொடங்கிவிடும்...

சாராய நாக்கிற்கு
சாதரண உப்பும் காரமும்
பத்தவே பத்தாது...
எப்படிச் செய்தாலும்
இல்லை ருசியென்று
காரணத்தோடு அடித்த அப்பா
இப்போதெல்லாம்
காரணமின்றியும்
அடிக்கத் தொடங்கிவிட்டார்

எனக்காக
புத்தாடை கேட்கையில்
அப்பாவின்
நாக்கு கூசச் செய்யும்
பதிலால்
அம்மாவின் துன்புற்ற இதயம்
தூண்டில் புழுவாய்
துடிதுடித்துப் போகும்

நான் கால்சட்டை நனைத்த
இரவுகளை விட
அம்மாவின் கண்ணீரில்
நனைந்த இரவுகள்
ஆயிரம்

வீட்டையே விட்டு
வெளியே வராதவள்
அம்மா
எப்படியோ அவள்
சுதந்திரம் மட்டும்
களவு போனது...

தனக்கென ஒரு ஆசையும்
வைத்துக் கொள்ளாத
கற்காலத் தாய்
"உனக்கென வருபவளுக்கு
ஒரு குறையும் வைக்காதே"
எனச் சொல்லும் பொது
முற்போக்குத் தாய்

எதற்குப் பிறந்தாள்
என்ன சுகம் கண்டாள்
வாழ்கையில் இவள்?
என்ற கேள்விகளுக்கு
இதுவரை விடையில்லை...
மஞ்சள் கயிறால்
வென்றவர் அப்பா
தோற்றுப் போனவளும்
பிள்ளைக்காகவே
தோல்வியை மெல்லிய
தோளில் சுமப்பவளும்
அம்மா!
--நாவிஷ் செந்தில்குமார்

Thursday, March 19, 2009

தேர்தல் கூத்து

வெள்ளந்திகள் போல
பச்சோந்திகள் பல
நடமாடும் காலம்...
துண்டைப்பார்த்து
துளியும் ஏமாற வேண்டாம்!
வண்ணங்கள் வேறானாலும்
அவர்கள் தம்
எண்ணங்கள் ஒன்றேதான்!

கூட்டணி சேர்ப்பில்
கொட்டியிரைக்கப்படும் பணம்
கொடுத்துச் சிவந்த
வாங்கிப் பழுத்த
கரங்கள் குலுக்கிக்
கொண்டிருக்கும்
வண்ணச்சுவரொட்டிகள்
இனி
வழி நெடுகிலும்...

தொகுதிப் பங்கீட்டிலிருந்து
தொடங்கிவிடும்
குழாயடிச் சண்டை...
விளக்கெண்ணை விட்டு
விழிகளைத் தயார் செய்யுங்கள்
காணவேண்டியிருக்கும்
ஏராளமான அவலங்களை...

யாகம் வளர்க்கின்றனர்
அரசியல்வாதிகள்
தூபம் போடுவார்கள்
தீயிறங்க...
தகுதியில்லாதவனுக்கு
வரமாய்ப் போகின்ற
வாக்குதான்
உங்களுக்குச் சாபமாய்
விழுகின்றது!

இலவசங்களுக்கு
இரையாகிப் போகாதீர்கள்!
தாயன்பு தவிர்த்து
ஏனைய இலவசங்களுக்கு
இங்குண்டு
ஏதேனும் ஒரு
மிகப்பெரிய விலை!

மௌனங்கள்
கோர்த்துக் கோர்த்து
மாலையாக்கியது போதும் - அது
அப்பாவிகளின் வாழ்க்கையை
அலங்கரிக்காது ஒருபோதும்.

அடுத்தமுறை தவறு செய்ய
யோசிக்கும்
அடிவாங்கும் மாடு - இதை
அறியாது போனால் நாம்
அதனிலும் கேடு.

இந்த முறை தருவோம்
சரியான சவுக்கடி
இதைச் சொல்லவேண்டும்
உங்கள் மனம் அடிக்கடி...
--நாவிஷ் செந்தில்குமார்

Tuesday, March 10, 2009

யார் சொன்னது?

யார் சொன்னது
தன் வினை
தன்னைச் சுடும் என்று?
பொறுப்பில்லாதவன்
புகைத்த பின்
அணைக்காமல் போட்ட
வெண் சுருட்டு
செருப்பில்லாதவன்
காலையல்லவா சுட்டது!

யார் சொன்னது
குடி குடியைக் கெடுக்குமென்று?
குடி போதையில் ஒருவன்
பள்ளிச் சிறுமியைக்
கெடுத்தான் என்று
நாளிதழ் ஒன்று
செய்தி சொன்னது!

யார் சொன்னது
மது வீட்டுக்கு
நாட்டுக்கு உயிருக்கும்
கேடு என்று?
ஆதாயம் இல்லாமலா
அரசாங்கமே
விற்பனை செய்யுது?
–நாவிஷ் செந்தில்குமார்

Saturday, January 17, 2009

ஒரு தாயின் கடிதம்

பேர் சொல்ல நான் பெத்தவனே
பெரிய படிப்பெல்லாம் முடிச்சு
வேலை தேடப் போனவனே!
நீ போயி மாசமென்னமோ
எட்டுதான் ஆச்சு
எனக்கு அது
மகாமகமா கழிஞ்சாச்சு!
ஓலையில எழுதும்படி
ஒண்ணுமேயில்ல
ஒன் நெனப்புனால மட்டுந்தான்
எழுதுறேம் புள்ள

பசு மாடு நேத்துதானே
கன்னு போட்டுச்சு!
சீம்பால பீச்சிறப்ப
ஒன் நெனப்பு வந்து
கண்ண கசக்குச்சு
மேட்டுக் காட்டுல சோள கருது
நல்லா வெளஞ்சுச்சு
கம்மாயில தண்ணி இல்லாம
சருகா பட்டிடுச்சு

உனக்கான அத்தமவ
பரிமளத்துக்கு தேதி குறிச்சாச்சு
அரசாங்க உத்தியோக மாப்புள்ள
அவங்க மனச மாத்திபுடுச்சு
எலித்தொல்ல நம்ம வீட்ல
இப்ப இல்லவே இல்ல
வயித்துப் பசி போக்க
அவை எல்லாம் நம்ம வீட்டு
அடுப்புல வேகுதுல்ல

மூத்தவளுக்கு வரன் கேட்டு
தரகர் வந்தாரு
கொழுத்த சொத்துள்ள
எடமுன்னு சேதி சொன்னாரு
என்ன ஒண்ணு
ரெண்டாம்தாரமாத்தான்
வாக்கப்பட வேணுமுன்னாரு
வறுமையும் அவ வயசும்
சரின்னு சொல்ல வைச்சிடுச்சு
சின்னவ வாங்கின மார்க்கு
தொள்ளாயிரத்து மூணு
'என்ன கல்லூரியில சேத்து விடு' ன்னு
பாடாப் படுத்துறா நின்னு
ஒப்பனுக்கு குடிப்பழக்கம்
இப்ப இல்ல கண்ணு
எப்படி சொல்வேன்
வித்துக் குடிக்க ஒண்ணுமில்லேன்னு
நிப்பாட்டிட்டாகன்னு

இது கேட்டு நீ ஒண்ணும்
வருத்தப்பட வேணாங்கன்ணு
லட்சியத்தில் நீ ஜெயிக்கணும்
நெலயாய் நின்னு
வெதநெல்ல வித்து பணம்
அனுப்பி வச்சிருக்கேன்
வாங்கி நீ வேளைக்கு சாப்புடு
தோதுபாத்து செலவு செஞ்சு
நாளக் கடத்திடு
தீர்ந்துபோனா கடுதாசி போடு
தாலிமணி வச்சிருக்கேன்
வித்தனுப்பறேன்

தவறான எண்ணம் வேண்டாம்
தளராத தன்னம்பிக்கையால
நம் தலைமொறையின்
தலையெழுத்த மாத்தி எழுது!

செத்தேன்னு சேதி வந்தா
கொஞ்சம் அழுவு
பொறகு எல்லாமே சகசமுன்னு
மொகத்த கழுவு
வேல ஒண்ணு கெடச்சவுடனே
ஓடி வந்து ஏஞ் சமாதியில
சாஞ்சுபடு
அந்த சந்தோசச் சேதிய
என் காதுல சத்தம் போடு...

--நாவிஷ் செந்தில்குமார்

Thursday, January 15, 2009

காட்சிகள் இரண்டு தோற்றம் ஒன்று

இரு சக்கர வாகனத்தில்
பச்சை விளக்குக்கான
காத்திருப்பில்
நீலப்படம் ஒன்று...
காது கடிக்கும் இதழ்கள்
மார்பு சுமக்கும் தோள்
முன்னிடை கீழ்ப் பிடிக்கும் கைகள்...
வேண்டாம் இவர்கள்
காதல் மிச்சம்
சொன்னால்
விழுந்ததாய் உணர்வீர்
காக்கை எச்சம்.
***********************************************
சாலையோரப்
பெருமரமொன்றினருகில்
பின்னிருகால்கள் பரப்பி
ஏதுவாய் நின்றது
ஒரு நாய்
எம்பிப் புணர்ந்தது
இன்னொரு நாய்.

--நாவிஷ் செந்தில்குமார்

Wednesday, December 10, 2008

டிசம்பர் - 11 - இன்று பாரதி பிறக்கும் நாள்

இடிகொட்டும் இரவில்
கருத்தரித்தவனே
கதிரவனும்
உனைக்கண்டுதானடா
கதிர் தரித்தது!

செப்டம்பர் - 11
இரட்டைக் கோபுரம்
இடிந்த தினம்
மட்டுமல்ல - நீ
இறந்ததினமும்தான்
என்பதிங்கே
எத்தனை பேருக்கு
வெளிச்சம்?

பதினொன்றில்
பிறந்தும் இறந்தும்
போனதாலே
உன்னைப் பத்தோடு
பதினொன்றாக
எண்ணிவிட்ட பாவிகளோ
நாங்கள்?

இங்கே எல்லோரும்
பிறந்ததற்காக
இறந்து போக - நீயோ
மீண்டும் பிறக்கவே
இறந்து போனாயடா!

பலரது பெயரோடு
வருகின்ற பாரதியே
இன்று ஒரு
பிள்ளையாகவே
பிறந்து வா
நீ
பாடவும் சாடவும்
வேண்டியது
இன்னும் ஏராளம்
இங்கே...
--நாவிஷ் செந்தில்குமார்

Monday, December 1, 2008

இலக்கிய வெளியீடு

எங்கள் இல்வாழ்க்கையில்
இன்றொரு
இலக்கிய வெளியீடு...

பிரசவிக்கப் போகிறோம்
மடியில் சுமப்பதை
அவளும்...
மனதில் சுமப்பதை
நானும்...

பெயர் சொல்லும்
பிள்ளை ஒன்று தர
முகவரி தந்தவள்
செய்கிறாள்
முழுப்போராட்டம்...

அவள் வயிற்றில்
வலி பெருக - என்
அங்கமெங்கும்
இடி விழும்

யாழிசைக்கும் குரலாளின்
காலுதைக்கும் ஓசை கேட்டு
காது வழியே
செந்நீர் கசியும்

நீண்டு வளர்ந்த தாடியை
நீக்கும்பணி
விரல் தொடுக்கும்
நகம் கடிக்கும்
பழக்கம் வந்து
நட்புறவாய்
ஒட்டி நிற்கும்

பதினொரு ரிக்டர்
அளவான
பூகம்பம் ஒன்று - என்னை
வேரோடு அசைக்கும்

சுற்றம் மறந்து
சுயம் இழந்து
கண்ணீர் பெருகி
காட்சி மறைக்கும் - என்
சரீரம் சற்றே
செத்திருக்கும்

சிசுவின் சத்தம்...
ஜீவன் உயிர்க்கும்
தேகம் முழுக்கப்பல் முளைத்துப்
பலமாய்ச் சிரிக்கும்

பிறந்த மழலை
பார்த்துச் சிரிக்க - அதைப்
பெற்ற குழந்தையோ
மயங்கியிருக்க...

'ஒன்றே போதும்' எனும்
சிக்கன உறுதிமொழியை
மனம் எடுக்கும்
அக்கணம்
தேசப்பற்று என்பதெல்லாம்
இரண்டாம் பட்சம் - என்
தேவதைக்கு ஏதுமாகிவிடுமோ?
என்பதே என் அச்சம்
--நாவிஷ் செந்தில்குமார்

Wednesday, November 26, 2008

சென்னையில் இன்று அடை மழை!!



பொட்டு மழை பெய்யலையே
என்ற ஜனம் இப்போ
கொட்டும் மழையிலே...
தொட்டி மீன்களோ
வெட்டவெளி நீரிலே...

மழை நின்ற தருணங்களில்
மரக்கிளை பெய்கிறது...
வேர்களோடு பூக்களும்
இன்று நீர் குடிக்கின்றன

கடைக்கு வந்த பெண் ஒருத்தியை
காற்றின் துணையோடு
குடையை விலக்கி
தொட்டுப்பார்த்தது மழைத்துளி...

ஊருக்கே பெய்த மழை
ஏனோ
பள்ளி கல்லூரிகளின்
கதவுகளை மட்டுமே
மூடியது...
அலுவலகமெங்கும்
ஆடை நனைந்த
கோலங்களே...

வந்து வந்து போகும்
மின்சாரம்
மொத்தமாய்
நின்றே போனது

தவளைகள் தன்
வாயால் அழைத்தும்
பாவம் பாம்புகள்
பதுங்கியே இருக்கின்றன...

இறுதி கணங்களில்
எரிகிறது மெழுகுவர்த்தி
இதற்கு அடுத்த வரி
இருட்டில் எழுதியது...
சென்னையில் இன்று
அடை மழை!!
--நாவிஷ் செந்தில்குமார்

Tuesday, November 25, 2008

முதுகெலும்பு


பசுமைப் புரட்சி
செய்ய எண்ணி
பஞ்சப் பரதேசி ஆனவர்கள்
நாங்கள்...
வறுமை விலகிய
சந்தோசத்தில்
வாய் விட்டு சிரிக்கையில்
கலைந்த தூக்கத்தோடு
கனவு தொலைய...
துவண்டு போவோம்
நாங்கள்
விதைத்த விதை
மண்ணிலிருந்து
வெளிவராதா? என
விரக்தியோடு
வானம் பார்த்தே
விழிபெருத்தவர்கள்
நாங்கள்
முதுகெலும்பு என்ற
முன்னோர்களின் வார்த்தைக்கு
முரணாக
கூன்விழுந்தவர்கள் என
பெயர் பெற்றவர்கள்
நாங்கள்
வயிற்றுக்கு சோறு கேட்கும்
குழந்தைகளை
வானவில் பிடித்துத் தருவதாகக்
கூறி வளர்ப்போம்
உயிரின் சட்டைப்பையை
ஒருவேளை கஞ்சியால்
நிரப்புவோம்
பட்டினிச்சாவு - எங்கள்
பரம்பரை நோய்
--நாவிஷ் செந்தில்குமார்

Monday, November 24, 2008

நீ




பிற மொழி கலப்பில்லாமல்
கவிதை எழுத
சொன்னார்கள்
தடுமாறினாலும்
தாய்மொழியிலேயே
எழுதிவிட்டேன்...
மோசக்காரர்கள்
இப்போது மொழியே
இல்லாமல் எழுத சொல்கிறார்கள்
என்ன செய்வது
எளிமையாக
உன்னை கை காட்டிவிட்டேன்
--நாவிஷ் செந்தில்குமார்

Sunday, November 23, 2008



உன் அழகை வெளியோர்
பார்த்துவிடக் கூடாதென
தனக்குத்தானே
முலாம் பூசிக்கொண்டது
உன் வீட்டு
ஜன்னல் கண்ணாடி!

நீ ஆடை கலைவதென்னவோ
உன் வீட்டு அறையில
ஏனோ என் மனம்
அலறுது இங்கே
பறை போல...

கடவுள்
என்னை படைத்து பிறகு
உன்னைப் படைத்ததன்
அடிப்படை நோக்கம்
ஒரு கவிதை படைத்தலே...

இவள்
மார்பில் மச்சம்
ம்ம்..
மச்சத்துக்கே மச்சம்.

உன்னை மட்டும் உள்ளடக்கிய
"Photo" கொடு
தேவதை தொழிற்சாலைக்கு
"Motto" கேட்கிறார்கள்
என்னிடம்...


-நாவிஷ் செந்தில்குமார்

Wednesday, August 22, 2007

முதியோர் இல்லங்கள்


வாழும் தெய்வங்கள்
கூடி வாழ்வதால்
கோயில்களாகின்றன
முதியோர் இல்லங்கள்!

புதியன புகுதலும்
பழையன கழிதலும்...
பொருள் வேறாய்ப்
புரிந்துகொண்டவர்களின்
மண உறவு
பெற்றவர்களின் மன முறிவு

இருந்த கடவுளை
துரத்தி விட்டு
எதையோ தேடுவான்
பூஜை அறையில்....

அன்று
தந்தைகள் கான்வென்டில்
கட்டிய தொகைகள் - இன்று
பிள்ளைகளால்
தவனை முறையில்
சேர்க்கப்படுகின்றன...
வயோதிகர் காப்பகங்களில்

பூட்டிய வீட்டிற்கு
காவல் காக்க
நாயை வளர்ப்பான்
ஈன்ற தாயை மட்டும்
ஏதோவொரு
முதியோர் இல்லத்தில் சேர்ப்பான்

கட்டிலின் சத்தத்தில்
கரைந்து போகின்றனவோ
பெற்றோரின் கதறல்கள்?

வந்தவழியை
மறந்தவர்களுக்கு மட்டும்
கருவறையே
கல்லறையாக மாறக்கூடாதோ?
--நாவிஷ் செந்தில்குமார்

அன்னப்பறவை


அன்னப்பறவை இனம்
அழிந்து போனதாக
சொல்கிறார்கள் - இன்னும்
உன்னை பார்க்காதவர்கள்...
தேவதையின் கனவில்
பேய்கள்தான் வரும்
என சொல்வார்கள்
எனவேதான் உனக்கு மட்டும்
டெவில் ட்ரீம்ஸ்
சொல்கின்றேன்.
எல்லோருடைய வாயிலிருந்து
வார்த்தையாக வருவது
உன்னிடம் மட்டுமே
வரமாக வருகிறது.
பூக்களின் தேன்
குடித்து சலித்துப் போன
வண்டுகள் - உன்
வியர்வையை சுவைத்து
வாழவே ஆசைப்படுகிறதாம்!
நீ தூங்கினால் - உன்
கனவாக வேண்டும்
துயில் கலைந்தால் - உன்
நினைவாக வேண்டும்
உன் இதழ் நடுவில்
இளைப்பாறும்
காற்றாக வேண்டும் - உன்
விரல் சொடுக்கில்
வெளியாகும்
ஒலியாக வேண்டும்.
பார் ரதியே!
உன் அழகை பாடினால்
எக்கவியும்
பாரதியே!..
--நாவிஷ் செந்தில்குமார்

Friday, June 22, 2007

பார்வை


இரவுக்கும் பகலுக்கும்
இடையிலான
இளங்காலைப் பொழுது...
ஞானச் செருக்குடன்
வானம் நோக்கிய
பசும் புல்வெளிகள்
குணமகள் கோலமாய்
தலை குனிந்திருக்கின்றன...
புல்லின் நுனியில் பனித்துளி
சிலர் நினைக்கக் கூடும்
தென்றல் வந்து
தழுவல் கொண்டு
தந்த முத்தத்தின்
அடையாளமாய்
உறையாத உமிழ்நீரோ?
உழைப்பின் முடிவில்
சிந்திய வியர்வை துளியோ என்று!
யார் உணரக்கூடும்?
வலிக்குமென்று தெரியாமல்
வன்மமாய்
கால் பதித்து ஒருவன்
காயப்படுத்தியதால் வந்த
கண்ணீர் துளியே என்று
வெற்றுப் பார்வைக்கு
விளங்கிடுவதில்லை
உற்று நோக்கினாலே புரியும்
புல்லிற்க்கும் உயிருண்டு...
உணர்வுகள் தாங்கும்
ஓர் இதயமுண்டு
---நாவிஷ் செந்தில்குமார்

காயாமரம்

முழுமையற்ற வார்த்தைகளை
மொழிந்து என்னை அழைப்பீர்கள்
முந்தானை பற்றி - என்
சிந்தனை கலைப்பீர்கள்

கட்டியணைக்கும் நோக்கோடு
கையிரண்டை விரிப்பீர்கள்
காலையில் குளித்த என்னை
அழுக்காக்கத் துடிப்பீர்கள்
கடைசியில் என் மார்பில்
கன்னம் வைத்துப் படுப்பீர்கள்

உங்களின் ஒவ்வொரு செயலிலும்
உள்ளது சொர்க்கமே
இப்படியே காலம் போனால்
என் வாழ்வும் சுவைக்குமே

பெற்றெடுக்கவில்லை என்றாலும்
பிள்ளைகள் என்றானீர்கள்
மடியில் பரவி - மனதில்
மகிலம்பூ மலரச் செய்தீர்கள்

சொல்லுங்கள்! சொல்லுங்கள்!!
அருமை மழலைகளே
"அம்மா" என்றொரு முறை
அலறுங்கள்...

மாலையில் அடங்கிடும்
சத்தம்
மழலைகளை அழைக்கும்
வீடுகள் தத்தம்!

மடியில் கனமில்லை என்றால்
வழியில் பயமில்லை என்பார்களே!
என் மடியில் கனமில்லை
அதனால் என் வாழ்க்கையே
பலனில்லையே!
குப்பைத்தொட்டிகள் கூட
குழந்தைகள் சுமகின்றனவே
என் குறுவயிற்றுக்கு
கொடுப்பினை இல்லையே!

இறைவா!
முகம் பார்க்க
கண்ணாடி தந்தாய் - அதில்
மூலம் பூச
மறந்து போனாயே!

என்னை இடுகாடு
இட்டுச் செல்லவிருப்போரே
இறந்தபிறகு என் புதைகுழியில்
பூக்களை தூவாதீர்கள்
புழுக்களை தூவுங்கள்!
அவை என் அடிவயிற்றில்
துள்ளக்கண்டு
என் ஆத்மா
சாந்தியடையட்டும்! - கூடவே
என்னை புதைத்த இடத்தில்
புற்பூண்டுகளை
வளரவிடுங்கள்
அவைகளை தின்றுவிட்டு
ஆடுமாடுகளாவது
"(அ)...ம்...மா..." என்றலரட்டும்!
---நாவிஷ் செந்தில்குமார்

Sunday, June 17, 2007

ஒரு கல்லறை பேசுகிறது!

உன் காது மடல் சிவந்தாலே
துடிதுடித்துப் போவானே - இவன்
ஜீவன் துவண்டு போகையில்
கொஞ்சமேனும் வலித்ததா உனக்கு?
நீக்கமற உன் நினைவுகள் சுமந்தவன்
உறங்காமல் காத்துக் கிடந்த
நாட்கள்தான் எத்தனையோ?
இந்த நிரந்தர உறங்கலுக்காக...
வாழுகையில் மரணம் தேடியவன்
வானுலகில் மானுடம் தேடுகின்றான்

என்றேனும், உன் சந்ததியின்
சடங்கு முடிக்க
கல்லறை நோக்கி வருகையில்
ஒரு கவியின் சத்தம் கேட்டால்
சற்று செவி சாய்த்துவிட்டுப் போ பெண்ணே!

கல்லறைக்குள் உடல் புதைத்து
வெளியே...
காவல் காக்கின்ற பாவி இவன்!
நீ மரணித்து வருவாய் என்றல்ல
மலர் கொண்டு வருவாய் என...

உனது புரிந்து கொள்ளலுக்காகவே
புதைந்து கிடக்கின்றன
இவன் காதலின்
புகழ் மொழிகள்
பூக்கள் பறிக்கையில்
உன் விரலில் முள் பதிக்கும்
ரோஜாக்களின் மொழிகளை
கேட்டுப்பார்
இவன் மரணத்தைப் பேசும்

சில கணமேனும் நீ
சூடிய பூக்களை
கல்லறையில்
பூஜைக்கென வை
அப்போதாவது, அவனது
ஆன்ம தாகம் அடங்கட்டும்

காதல் இருந்தால்
உன் இதழ் பதித்து
எச்சில் தடவி ஜீவனை
ஈரப்படுத்திவிட்டுப் போ!
இல்லை
கருணை இருந்தால்
சிறிது கண்ணீர் விட்டுப் போ!
அவனுக்கு தாகம் என்றால்
தண்ணீராகட்டும்
இல்லையென்றால்...
காறி உமிழ்ந்துவிட்டுப் போ!
இதுவே
காதலுக்காக செத்தவனின்
கடைசி சமாதியாகட்டும்!..
---நாவிஷ் செந்தில்குமார்

Wednesday, June 6, 2007

வரைகோட்டு ஓவியங்கள்


முந்தைய நாட்களின்
ஏதோ ஓர் இரவில்
முகமறைத்துக் கொண்டதென்
எதிர்காலம்

காலைக் கதிரவனின்
கதகதப்பில்
உயிர் பெறலாம் என்றால்
நான் பனித்துளியா?
புல்வெளியா?

விதை விதைத்தவர்
யாரோ?
வினை அறுப்பது
நானே!

பிறப்பளித்வள் - சேர்த்தே
இறப்பையும்
எழுதிவிட்டுச் சென்றுவிட்டாள்
சிசுக் கொலையிலிருந்து
சிறை விடுத்தவள்
உயிர் கொல்லி நோயை
உடன் அளித்தாளே!
கள்ளிப்பால் கொடுக்க
தவறியவள்
கொள்ளி போட்டு சென்றாளே
நான் என்ன
சாபத்தின் ஒட்டுமொத்த
சாயல் வாங்கி
வந்தேனா?
இல்லை பாவத்தின்
முகவரியை பகிர்வு
கொள்ள வந்தேனா ?

நான் கண்ட
சோகங்கள் - இங்கே
சொல்வதற்கில்லை!
அனுபவித்துதான்
ஆக வேண்டும்
மறுப்பதிற்கில்லை!

என் போன்றோரின்
வாழ்க்கை வெறும்
வரைகோட்டு ஓவியங்கள்!
நீங்களே
வண்ணம் தீட்ட வேண்டிய
மிகச்சிறந்த ஓவியர்கள்!
---நாவிஷ் செந்தில்குமார்

Saturday, June 2, 2007

காதல்

காதல் ஒரு
கைக்குழந்தை
வா! என்றழைப் போரிடம்
வாஞ்சையுடன்
ஓட்டிகொள்ளும்

பரிசுத்த ஆன்மாக்களின்
பராக்கிரமம்
அன்புக் களஞ்சியத்தில்
அடைத்து வைக்கப்பட்டிருக்கும்
அரியவகை உணவு

ஏற்றுக்கொண்டவருக்கு
இறைவன்
இல்லை என்பவர்தம்
பகுத்தறிவு

இரு இதயங்கள்
இரத்தம் பாய்ச்சி
மலரச் செய்யும்
மகோன்னத மலர்

கண்கள் வளர்க்கும்
ரகசியத் தேனி
காமம் இதற்கு
கசப்புத் தீனி

ஒவ்வொரு உயிரியும்
ஒளிவு மறைவாகவேனும்
வாசித்துவிட்டுச் செல்லும்
ஒற்றை வரி

இருளுக்குள்
பொருள் தேடுவதல்ல
காதல்
உயிருக்குள்
உயிர் தேடுவது...

---நாவிஷ் செந்தில்குமார்

பிரிவு


கண்கள்
ஈரமாகித்தான் போகின்றன
நாம் பிரிந்து
தூரம் செல்லும் - இந்த
துன்பியலை நினைக்கின்றபோது
கனவு பெருத்து
கல்லூரியில் சேர்ந்தேன்
நினைவுப் பருவாய்
நீ உதித்தாய்
ஒரு தட்டில்
உண்டு மகிழ்ந்தோம்
தெரு நடுவில்
கட்டிப் புரண்டோம்
தொடங்கிய சுவடுகள்
தொலைவதற்குள்ளாக
முடிவுரை என்பதிங்கே
முகிழ்த்ததேனோ?
உன் பிரிவு
ரணமாய் இருக்கிறது எனக்கு
பரவாயில்லை
நாளை நீ நாட்டும்
வெற்றிக் கொடியின்
நிழல் தரும் சுகம்...
அது போதும் எனக்கு
காகிதங்களில்
கண்ணீரை நிரப்பி
பிரிகிறோம் தோழா!
நாம் காணும் வலி நிகராக
கல்லறைச் சோகங்களும்
இருக்காது போலும்
விழிகேள மறுக்கிறது
விடை
தூறல்கள் ஒன்றேதான்
அதனது கொடை
கணினி வழியே
கடிதம் அனுப்பு
முடிந்தால்...
உன் சுவாசகாற்றிடம்
என் முகவரியைச்
சொல்லியனுப்பு
எனக்கு வேண்டும்
இன்னொரு பிறப்பு
அப்போதும்
நானே செய்வேன் - உன்
உயிரின் இடவலம் தொடும்
ஆக்கிரமிப்பு
இலக்கணம் கொண்டது
நமது நட்பு!
இதுவரை இயற்றிய
இலக்கியம் அறியாது
இதனது சிறப்பு
---நாவிஷ் செந்தில்குமார்

கவிஞன்


தமிழ் நனைந்த தேசத்தில்
புறம் வந்த
புற்றீசலாய்
சொற்களின் தேரில் ஏறி
நீண்ட நெடிய
கவிதைப் பாதையில்
உலாவர புறப்படுகின்றேன்...
வாழ்க்கையின் உரைநடையை
கவிதையாக்கத் துடிக்கின்ற
மனிதன் நான்
நிகழ்காலத்தை நிர்மூலமாக்கி விட்டு
எதிர்காலாம் பற்றிய கனாக்களில்
எண்ணங்களில் லயிக்கிறேன்
அகம் நிரம்ப
அழுக்குப் பட்டுக் கிடக்க
புறம் ஒன்று பேசி
புகழ் நிறைய ஈட்டுகின்றேன்
என் வீட்டில் உலை கொதிக்க
உ லை கொதிக்காத வீட்டுக்காரன்
குரலில் பேசுகிறேன்
ஆடை அணிகலன் சேர்க்க
நிர்வாணங்களை
பேசிப் புகழ்கிறேன்
வயல் வெடிப்புகளை
கண்ணீரால் பூசி
கவிதை எழுதத் துடிக்கிறேன்...
சுயத் தோடு போரிட்தேன்
நயமாய் நானும் உணர்ந்திட்டேன்
அவனுக்கு முன்னால்
நாமெல்லாம் பொம்மைகள்
என்கிற உண்மையை
உணர்ந்து
கர்வத்தைக் தொலைக்கிறேன்
காலம் எனையொருநாள்
மாற்றும்
கவிஞன் எனும்
பதத்தின் பொருளைப் புகட்டும்
காலத்தின் பார்வையில்
என் கவிதை வரிகள்
தூசுத்துகள் என
கம்பீரமாய் சொல்வேன்
காலத்தைப் போல் ஒரு
கவிஞன் இல்லையென...
---நாவிஷ் செந்தில்குமார்

நிலவே வா

நிலவுதான் நீ
எனக்கு
ஆனால் அமாவாசைகள்
அதிகம் உனக்கு
தேய்பிறையானாலும்
பரவாயில்லை
அவ்வப்போது
வந்து செல்
என் கனவுலகிற்கு...

---நாவிஷ் செந்தில்குமார்

மாற்றம்


அன்று
மதங்களும்
அதன் பண்டிகைகளும்
மடமை என்றிருந்தேன்.
இன்று
காதலை மதமாக்கி
உன்னை கடவுளாக்கி
உன் பிறந்த நாளில்
பண்டிகை கொண்டாடுகின்றேன்!
---நாவிஷ் செந்தில்குமார்