ஒளி வாங்கி
உயிர் பெற்று வரும்
ஒவ்வொரு விடியலும்
சொல்லாமல் சொல்லிவிட்டுப்
போகின்றன...
என்னை ரணப்படுத்த
இருள் சூழ்ந்த
இன்னொரு இரவு
வரும் என்பதை
பிறப்பின் போது
கள்ளிப்பாலோடு போராட்டம்
தப்பியதால்
குப்பைத் தொட்டிக்கு
இடமாற்றம்
இளமையில்
வயிற்றுப் பிழைப்பிற்கே
திண்டாட்டம்
சில காலந்தொட்டு
பலரின் காமப்பசிக்கு
என் கண்ணீர் ஊட்டம்
மூச்சுவிடும் சடலங்களே
ஏந்தி சுமந்த தாய் போல
தாங்கி சுமக்கும் பூமி போல - மனம்
வெதும்பி உங்களை சுமக்கின்ற
பாவி நான்
என் விசும்பலோடு
வியர்வையும், விழி நீரும்
உங்கள் கல் நெஞ்சை கரைக்கவில்லையா?
வேலை கேட்டால்
சில வேளைக்கு அல்லவா
இருக்க சொல்கிறீர்கள்
இங்கு முதலாளிகளின்
தோப்பு வீடுகள்
அந்தப்புரங்களாகும்
அவலங்கள் இல்லையா?
உறவுகளோடும் - நல்ல
உணர்வுகளோடும்
பிறந்திருந்தால்
களவு புணர்ச்சியில்
களிப்பு கொள்வீரா?
எல்லாம் முடிந்தபின்
ஆடைளோடு மனிதன்
என்கிற முகமூடியை
அணிந்து செல்கின்ற
மிருகம்தானே நீங்கள்?
மாதம் மூன்று நாள்கள்
அவைதான்
என் நரகத்தின்
விடுதலை
இறைவா!
என்றாவது ஒருமுறை
எனக்குத் தாய்ப்பால்
சுரக்கட்டும் - கூடவே
அதற்கு நல்ல
தலையெழுத்தும் கிடைக்கட்டும்
---நாவிஷ் செந்தில்குமார்
இரண்டாவது வார்த்தையில் இறந்துபோனவன்
13 years ago
1 comment:
Awesome one :)
Post a Comment