Friday, June 1, 2007

கூண்டுப்புறா

தினமும் அந்த
வழியில் செல்கையில்
எதிர் வீட்டில் புறாக்களை
பார்ப்பது வழக்கம்
அன்று
தீனி வைக்க வந்தவளின்
புன்னகையையும்
பார்க்க நேர்ந்தது!

அது முதலாக
பரஸ்பரம் பார்வை அம்பினை
பரிமாறிக் கொள்வோம்
தூய அன்பின்
துகிலை உரித்து
தொண்டைக் குழிக்குள்
பற்றிக்கொள்வோம்

வாசகம் இல்லாமலே
சூசகமாய்
பேசிக் கொள்வோம்...
வார்த்தை உயிர்ப்பதற்குள்
வாகனம்
இடைவெளியை
அதிகரித்து விடும்
காததூரம் தாண்டிய பிறகு
இதயம் சற்றே
கனத்துப் போகும்

தனிமையில் சந்தித்த
தருணத்தில்
சலனமற்றுக் கிடந்தோமே
தவிர
சங்கமிக்கத் துணிந்ததில்லை

சில நாட்களாக
கூண்டுப்புறாவைக் காணவில்லை
கூண்டு மட்டுமே...
கூடவே - அந்த
புன்னகையையும்...

அருகிலிருந்த
வீடொன்றில் விசாரித்தேன்
வழிப்போக்கன் ஒருவனின்
விழிப்பார்வைக்கு
பலியாகிவிட்டாளாம்
பெயர் கெட்டு போவதற்குள்
பேசி முடித்து விட்டார்களாம்
தாய் மாமனுக்கு!

புறாக்களை வளர்த்த நீ
எதனை அதனிடமிருந்து
எதிர்பார்த்தாய் பெண்ணே?
கூண்டுக்குள் வாழும்
வாழ்க்கையின் வரையறையையா?

உணர்வுகளின் உயிர்
அறுந்து போகின்றவரையில்
இதுபோன்ற நிகழ்வுகள்
நீடித்துக் கொண்டுதானிருக்கும்...
--நாவிஷ் செந்தில்குமார்

1 comment:

Unknown said...

hai senthil ,

i like ur "KAVITHAI" . All are very nice , exspecially related photo are very nice . Do these kind of thing more and more