பொருட்களைக் கலைத்துப்போட்டு
விளையாடும் குழந்தை
கோடை விடுமுறைக்கு
பாட்டி வீட்டிற்கு
சென்றதிலிருந்து
தானே கலைத்து
தானே கூட்டி
நாட்களைக் கடத்துகிறாள்
அம்மா.
ரயிலில்
சாப்பாடு ஊட்டிக்கொண்டிருந்த
அம்மாவிடம் கேட்காமலே
ஒரு கை உணவை எடுத்து
என்னை நோக்கி
'ஆ...' என்றது குழந்தை.
இன்றுவரை
மென்று கொண்டிருக்கிறேன்
அந்த நிகழ்வை...
அழைப்புமணியை
அழுத்திவிட்டு
ஓடி ஒளியும் சிறுமி
தவறிவிழுந்து காயம்பட்டதிலிருந்து
யார் வந்து அழைத்தாலும்
தாமதமாகவே
கதவு திறக்கிறேன்.
ஆட்கள் குறைவாக இருந்ததால்
ஆட்டத்தில்
என்னையும் சேர்த்துக்கொண்ட
குழந்தைகள்
எனது பால்யத்தை
மீட்டெடுப்பதற்குள்ளாக
ஆடத் தெரியவில்லையென
நீக்கிவிடுகிறார்கள்.
அலுவலகம் விட்டு வரும்
பெற்றோரை
ஐந்து மணியிலிருந்து
எதிர்பார்த்து ஏமாந்து
உறங்கிப்போன குழந்தை
தேக்கிவைத்திருந்த முத்தங்கள்
இரவு ஒன்பது மணிக்கு
குட்டி வாயிலிருந்து
எச்சிலாக வடிகிறது.
கோடை விடுமுறையில்தான்
கோபித்துக்கொண்டு
வெளிச்சென்ற குதூகலம்
ஒவ்வொரு வீட்டுக்கும்
மீண்டும் குடிவருகிறது.
பின்னாலிருந்து
கண்களைப் பொத்தி
'கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்'
என்ற அனைகாவின்
பிஞ்சு விரல்களுக்கிடையே
இன்னும் இன்னும்
அழகாகத் தெரிந்தது
இந்த உலகம்.
--நாவிஷ் செந்தில்குமார்
இரண்டாவது வார்த்தையில் இறந்துபோனவன்
14 years ago
7 comments:
சாப்பாடு ஊட்டிக்கொண்டிருந்த
அம்மாவிடம் கேட்காமலே
ஒரு கை உணவை எடுத்து
என்னை நோக்கி
'ஆ...' என்றது குழந்தை.
இன்றுவரை
மென்று கொண்டிருக்கிறேன்
அந்த நிகழ்வை...
வாழ்நாள் பூர மறக்க முடியாதே இதை !
குட்டி வாயிலிருந்து
எச்சிலாக வடிகிறது.
ஐயோ பாவம்
அழைப்புமணியை
அழுத்திவிட்டு
ஓடி ஒளியும் சிறுமி
தவறிவிழுந்து காயம்பட்டதிலிருந்து
யார் வந்து அழைத்தாலும்
தாமதமாகவே
கதவு திறக்கிறேன்.
நல்லா இருக்கு ....
நல்லா இருக்குங்க.
தொடர்ந்து எழுதுங்க.
அற்புதம் நண்பா
வாழ்த்துகள்
விஜய்
மிகவும் அருமை வாழ்த்துக்கள்
//பின்னாலிருந்து
கண்களைப் பொத்தி
'கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்'
என்ற அனைகாவின்
பிஞ்சு விரல்களுக்கிடையே
இன்னும் இன்னும்
அழகாகத் தெரிந்தது
இந்த உலகம்.
//
அருமை. வாழ்த்துக்கள்
//அலுவலகம் விட்டு வரும்
பெற்றோரை
ஐந்து மணியிலிருந்து
எதிர்பார்த்து ஏமாந்து
உறங்கிப்போன குழந்தை
தேக்கிவைத்திருந்த முத்தங்கள்
இரவு ஒன்பது மணிக்கு
குட்டி வாயிலிருந்து
எச்சிலாக வடிகிறது.//
என்னன்னு சொல்ல. படித்து முடித்தும் நெடு நேரம் அழைந்து கொண்டிருக்கிறேன் உங்கள் கவிதைகளோடு.
பாராடுக்கள் . இயற்கையை நன்றாகஅனுபவித்து எழுதுகிறீர்கள்.
Post a Comment