Wednesday, December 23, 2009

முன்னாள் சிநேகிதிகள்

போன வருடம்
பூங்கொத்துடன் வாழ்த்துச் சொன்ன
தோழி ஒருத்திக்கு
இந்தப் பிறந்தநாளில்
இருக்கேனா? செத்தேனா?
எனத் தெரியவில்லை...

அடுத்த கவிதைத் தொகுப்பின்
முதல் பிரதி தனக்கே
வேண்டுமெனச் சொன்ன
முப்பது தோழிகளும்
முகவரியைத் தொலைத்திருந்தார்கள்...

மூன்று வேளைகளும்
'சாப்பிட்டாயா?' என
குறுந்தகவலில் குடைச்சல் தந்த
தோழியின் அலைபேசிக்கு
அழைக்கிற போதெல்லாம்
அணைத்துவைக்கப்பட்டிருப்பதாகச்
சொல்லப்படுகிறது...

என் மகளை தன் மகனுக்குக்
கேட்பேன் எனச் சொன்ன
தோழியொருத்தி
அவள் திருமணத்திற்கே என்னை
அழைக்கவில்லை!

திருமணத்திற்குப் பிறகு
தற்செயலாகச் சந்தித்த
தருணமொன்றில் தோழியொருத்தியிடம்
கோபித்துக் கொண்டேன்...
அவளோ
'அவர் சரி, அத்தை மாமாவிடம்
சிநேகிதனொருவன் இருந்தானென
எப்படிச் சொல்வது?' என்றாள்...
இருந்தானில் இறந்து போயிருந்தது
எங்கள் நட்பு!

இரு மனங்களை இணைப்பதாகச்
சொல்கிற திருமணம்
எத்தனை எத்தனை
நட்பின் இதயங்களைப்
பிரிக்கிறதோ?

பெண்களை நம்புகிற
நட்பையும் நம்புகிற என்னால்
இப்போதெல்லாம்
இன்னொரு ஆணால்
தீர்மானிக்கப்படுகிற
பெண்களுடைய நட்பை
நம்ப முடியவில்லை!

ஏதோ உறுத்த முதன்முதலாக
மனைவியிடம் கேட்டேன்...
'நீயாவது சிநேகிதர்களுடன்
தொடர்பில் இருக்கிறாயா?'
அவள் விடுத்த பெருமூச்சு
தன் கொடிய வெப்பத்தால்
நானறிந்த மொழியொன்றில்
பெண்களின் வாழ்க்கையை
எழுத முயன்று
மூலையைத் தேடி முடங்கியது...
நன்றி : திண்ணை.காம்

12 comments:

யாத்ரா said...

நண்பரே, இந்த இரவில் உங்கள் கவிதைகள் ஒவ்வொன்றாக படித்துக கொண்டிருக்கிறேன், ரொம்ப பாதிக்கிறது.
இந்தக் கவிதை ரொம்ப ரொம்ப அருமை. ஒவ்வொரு தோழிகளுடனான உறவு முறிவில் சூழ்கிற வெறுமை, அதைப் பதிவு செய்திருக்கும் விதம் அப்படியே நெஞ்சையறுகிறது நண்பரே.

Senthilkumar said...

தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி யாத்ரா!

கார்த்திகைப் பாண்டியன் said...

ஏற்கனவே வாசித்து இருக்கிறேன் நண்பா.. ஆனால் ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் நெஞ்சை அறுக்கிறது.. நீங்கள் பெண்களைப் பற்றிப் பேசினாலும் அங்கே என்னையும் என்னால் பொருத்திப் பார்க்க முடிகிறது.. நட்பின் வலி..:-((

Senthilkumar said...

ஆம் நண்பரே!
நட்பில் ஆணென்ன... பெண்ணென்ன...
ஆனால், ஆண் நண்பர்களை முயற்சித்தால் எப்படியாவது பார்த்துவிட முடிகிறது
பெண் நண்பிகளை?
தங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி கார்த்திகைப் பாண்டியன்.

Sugirtha said...

இந்த கவிதையின் ஒவ்வொரு வரியிலும் உண்மையும் வலியும் வழிகிறது! நன்றாக பதிவு செய்திருக்கீங்க.

Senthilkumar said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி sugirtha!

பா.ராஜாராம் said...

ரொம்ப பிடிச்சிருக்கு நாவிஷ்!

Senthilkumar said...

நன்றி பா.ரா.

KarthigaVasudevan said...

ரொம்ப நல்லா இருக்கு கவிதை.
வலிக்கும் தான். மறக்க ட்ரை பண்ணலாம்,ஆனா எத்தனைய மறக்கறது?!பரிசுத்தமான நட்புன்னு சொன்னா யார் நம்பறாங்க?நம்மளை நாமளே கேட்டுக்க வேடியது தான் ஒவ்வொருமுறையும்.

Pop said...

Hi Naveesh, excellent Kavithai!!!

Very realistic one.....when a colourful friendship's shade fades away, its really hard to accept it:(((



[Thanks for your visit to my page]

பாலா said...

மச்சான் கைய குடு முத்தமே குடுக்கலாம் உனக்கு ..
:) . வலிக்குதுய்யா:(

மதுரை சரவணன் said...

//பெண்களின் வாழ்க்கையை
எழுத முயன்று
மூலையைத் தேடி முடங்கியது...
//

அருமை. வாழ்த்துக்கள்