Monday, December 14, 2009

விநாயகமுருகனின் "கோவில் மிருகம்" கவிதைத் தொகுப்பு

வலைப்பூ வந்த பிறகு, தனியொரு மனிதனின் ரசனைக்குட்பட்ட கரிசனத்திற்காகக் காத்திருக்கும் காலம் போயே போய்விட்டது. எண்ணத்தைக் கடைக்கோடி வாசகனுக்குக் கொண்டு போவதற்குப் போடப்பட்டிருந்த கனத்த பூட்டு உடைக்கப்பட்டுள்ளது. எனவேதான் , இணையமென்னும் பெருவெளியில் பற்றிப் படர்ந்து கிடக்கின்றன ஏராளமான கவிதைகள். அப்படி எழுதிவந்த விநாயக முருகனுக்குள்ளே முகிழ்த்திருக்கிறது, தன் கவிதைகளைத் தொகுத்துப் புத்தகமாகத் தரவேண்டுமென்ற எண்ணம். அதன் விளைவுதான், இந்தக் "கோவில் மிருகம்" என்னும் கவிதைத் தொகுப்பு.
வலைப்பூவை வாசிக்கிற வாசகனின் மனநிலையும், கவிதைத் தொகுப்பை வாசிக்கிற வாசகனுடைய மனநிலையும் வெவ்வேறான அலைவரிசையிலிருக்கும். அவர்களின் நாடி பிடித்தறிகின்றவன் வெற்றி பெறுகிறான். அந்த வித்தை விநாயக முருகனுக்கு கை வந்த கலையாய் இருக்கிறது. ஒரு தொகுப்பின் கடைசிப் பக்கம் வரை அழைத்துச் செல்கிற அபார சக்தியை முதல் நான்கு அல்லது ஐந்து கவிதைகள் பெற்றிருக்க வேண்டும். இல்லையேல், நல்ல கவிதைகள் கூட நிராகரிக்கப் படுகின்ற அபாயமிருக்கிறது.

அந்தப் பணியை விநாயக முருகனின் ஆரம்பக் கவிதைகள் செம்மையாய்ச் செய்திருக்கின்றன. மனிதகுலத்தின் ஆளுமையின் கீழ் மரித்துப் போன பிற உயிர்களின் சுதந்திரத்தை, "மீன் தொட்டிகள்" என்ற கவிதையின் மூலம் பேசுகிறார். கோல்டன் மீன் அழகென்று வளர்க்கின்றவன் வீட்டுக் குழம்பில் குளத்து மீன் கு(கொ)திக்கிற உண்மை இந்தக் கவிதையில் விளங்குகிறது. பிற உயிர்கள் மீது காட்டும் பிரியம், கருணை எல்லாம் இவர்கள் போடும் ஒரு விதப் பிச்சை.
மீன் தொட்டியின் விபரங்களை விளக்கிக் கொண்டே வருகிற கவிதையை, இப்படி முடிக்கிறார்.
"எல்லாம் சரி
மீன்களுக்கும் இந்தத் தொட்டி
பிடிக்குமென்று சொன்னதுதான்
எனக்குக் குழம்புகிறது"


ரிமைன்டர் வைத்து பிறந்தநாள் வாழ்த்துச் சொல்கிற கலாச்சாரச் சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதை, எந்திரத்தனமான வாழ்க்கைமுறையை
"இரண்டு கைகளைக் கூப்பி
தலையை லேசாகக் குனிந்து
புன்னகையோடு வரவேற்ற
பெண்ணொருத்தி
பொம்மையென்று
சற்று தாமதித்தே
உணர முடிந்தது"

என்ற கவிதை மூலம் உணர்த்துகிறார்.

பாட்டியின் இறப்பைப் பற்றிய கவிதையில், கூட்டுக் குடும்பங்கள் சிதைந்துவிட்ட நிலையில் பெரியவர்கள் இருந்தாலும் இறந்தாலும் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை மறைமுகமாகக் கூறுகிறார். கடமையைக் கூடச் சுமையாக நினைக்கிற முகமூடி மனிதர்களுக்கென சில கேள்விகளை வைத்திருக்கிற "விடுமுறை" என்ற இந்தக் கவிதை
"பத்து மணி நேரத்தில் முடிந்தது
அடுத்த நாள் திங்கட் கிழமை
அலுவலக தினம்
அதிகம் சிரமம் தரவில்லை பாட்டி"

என முடிகிறது.

ஆண் பெண் நட்பு சகசமாகிப் போன நிகழ்காலக் கட்டத்தில், இயற்கை உபாதை பற்றிக் குறிப்பிட இன்னொரு சொல்லின் தேவை இருக்கிற சங்கடத்தை "மகளிர் மட்டும்" என்ற கவிதை பாடுகிறது. மேலும் மாதவிடாய் தருணத்தில் இருக்கிற பெண்ணொருத்தி வலியின் கொடுமையால் ஏதோவொரு வார்த்தை சொல்லிவிட, அலுவலகத்தில் சக ஊழியன் அவளை "சிடு மூஞ்சி" என எளிமையாய்ப் பெயர் வைத்துவிடுகிற கொடுமையின் உச்சத்தை உணர்த்துகிறது.

கவிதைத் தொகுப்பின் தலைப்புக் கவிதை, எல்லாச் செயலுக்கும் எதிர்வினையுண்டு என்ற நிதர்சனம் அறியாமல், அதிகாரம் செய்கின்ற வர்க்கத்தைச் சாடுகிறது.
"காட்டுப்பாகனொருவன்
நம்பி உறங்குவது
கோவில் மிருகத்தின்
காலடி நிழலில்"

பூமியின் காலடியில் எந்த நம்பிக்கையில் உறங்கிக் கொண்டிருக்கிறோம்? என்ன செய்யக் காத்திருக்கிறது நம்மை?

அன்றாட வாழ்வில் ஆங்காங்கே கொட்டிக்கிடக்கிற நிகழ்வுகளைக் கவிதையாக்கித் தொகுத்திருக்கிறார். வாசகர்களை வாசகர்களாகவே விட்டுவிடாமல், அவர்களும் கவிதை எழுதலாம் என்ற தோழமை உணர்வை உண்டு செய்கின்றது ஒவ்வொரு கவிதையும். கவிதைகளைப் படித்து முடித்தபின் கனமான பின்அட்டையை கட்டை விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் இடையே வைத்து கசக்கி, இனி பக்கங்களேதுமில்லை என்று அறிகிறபோது, இன்னும் சில பக்கக் கவிதைகளைத் தந்திருக்கக் கூடாதா? என்ற ஏக்கம் தோன்றுவது இவருக்கும், இந்தக் கவிதைத் தொகுப்பிற்கும் கிடைத்த வெற்றி!
முடிவற்றுச் சுழலும் காலச்சக்கரத்தில் குறிப்பிடத்தக்க ஆரங்களாய் விளங்கும் கவிஞர்களோடு, தனது கவிதைத் தொகுப்பின் மூலம் தன்னையும் இணைத்துக் கொள்கிறார். வினய்க்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
நட்புடன்,
நாவிஷ் செந்தில்குமார்.

5 comments:

அகநாழிகை said...

அருமையான விமர்சனம். நன்றி.

- பொன்.வாசுதேவன்

anujanya said...

ஆஹா, வி.மு.வின் புத்தகம் இன்னும் கைக்கு வரவில்லை. உங்கள் விமர்சனம் அந்த ஆவலை இன்னும் தூண்டுகிறது. வாழ்த்துகள் வி.மு. மற்றும் நாவிஷ்.

அனுஜன்யா

சென்ஷி said...

விமர்சனப் பகிர்வு அருமை நண்பரே.. மிக்க நன்றி!

Senthilkumar said...

நன்றி! பொன்.வாசுதேவன், அனுஜன்யா மற்றும் சென்ஷி.

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

ஒரு கவிஞன், இன்னொரு கவிஞனின் கவிதையை விமர்சிக்கும், விமர்சனமும் கவிதை.