Friday, January 29, 2010

விசித்திரப் பறவை

இரண்டு மாதங்களுக்கு
முன்னொரு நாளிலிருந்து
எங்கள் வீட்டிலொரு
பறவை வசிக்கிறது
பகலில் தூங்கி
இரவில் விழிக்கிற
பறவை அது

பறக்கும்போது
சிக்கிப் பலியாகிவிடுமென்பதால்
காற்றாடியைப்
பயன்படுத்தமாட்டோம்
வழிதவறி
வெளியே சென்றுவிடுமென்று
கதவு ஜன்னல்களைக்
கவனமாகத் தாழிட்டுவிடுவோம்
அதன் எச்சம்
படுவதைத் தவிர்க்க
போர்வைக்குள் ஒளிந்துகொள்வோம்...

அலுவலகம் செல்ல
ஆறுமணிக்கு
எழுந்து குளிக்கிற நண்பன்
அதன் சேட்டைகளைப்பற்றி
நிறையச் சொல்வான்
நான் எழுகின்ற நேரத்தில்
நன்றாக
உறங்கத்தொடங்கிவிடும்
--நாவிஷ் செந்தில்குமார்

நன்றி : கீற்று.காம்

Monday, January 11, 2010

சகுனம்

கடினமான வேலை
கடிந்துகொண்ட மேலாளர்
எப்போதுமில்லாத
உடற்சோர்வு என
எதுவுமே சரியில்லை...
காரணமென்னவென யோசிக்கையில்
காலையில் குறுக்கே சென்ற
கறுப்புப் பூனை
கண் முன்னே வந்தது...
வீடு வந்ததும்
எதிர்வீட்டுப் பூனை
இறந்ததுபோனதென
அறைநண்பன் சொன்ன செய்தியால்
'காலையில் என் முகத்தில்தான்
முதலில் விழித்ததோ?' என்ற
கேள்வி எழுந்தது

நன்றி : கீற்று.காம்

Sunday, January 10, 2010

பயணம் சொல்லிப் போனவள்

கழுத்துக் கீழே ஒரு முத்தம்
இடுப்பினிரு பக்கமும்
இரு முத்தங்கள்
முகத்தில் மொத்தம் மூன்றென
முத்தம் வாங்கிப் போனாயடி…
மொத்தமாய்ப் போகத்தானடி?


பயணம் போவதாய்ச்
சொன்னாயடி - சொல்லாமல்
மயானம் போயிப்
படுத்தாயடி
பூக்கின்ற பூக்களெல்லாம்
கேட்குதடி - அதைச்
சூடும் கூந்தல் போன கதை
எப்படிச் சொல்வேனடி?


இடிக்கு அணைகின்ற
நீயின்றி
இரவில் கட்டில்
நனையுதடி…
கடந்தமுறை செய்தது
கடைசியென்றே தெரிந்திருந்தால்
கடித்து உன்னை
நானே தின்றிருப்பேன்


புழங்கிய வீட்டை
விற்றாலும்
போவேனா என்கிறது
உன் நினைப்படி….
உன்னுடன் வந்துவிடலாம்
என்றாலும்
உடன் விட்டுப்போனாயொரு
பரிசடி….
வாழ்ந்தாக வேண்டும்
நம் பிள்ளைக்காகவென
நினைக்கும் போதடி
உன் மார்பு குத்திய நெஞ்சு
இன்னும் வலிக்குதடி!


கணவனை இழந்தவள்
கைம்பெண் என்றால்
பெண்டிர் இழந்தவன்
பேரென்னடி?
என் வாழ்வானது மண்ணடி…

நன்றி : திண்ணை.காம்

Tuesday, January 5, 2010

உலக வெப்பமயமாதல் - (உரையாடல் கவிதைப்போட்டிக்கான கவிதை)

இருநூறு ஆண்டுகளுக்கு
முன்னர்
இங்கேயொரு
காடு இருந்தது
மலை இருந்தது
ஆறு இருந்தது
ஏரி இருந்தது...
பயிர்கள் வாட
உயிர்கள் வாடுமென்ற
பாடம் படித்தார்கள்!


இன்றோ
காடுகள்
அடுக்குமாடிவீடுகளாக
இருக்கின்றன
மலையில்
மல்டிநேஷனல் கம்பெனி
இருக்கிறது
ஆற்றில்
ஐந்து நட்சத்திர ஹோட்டல்
விளக்குகள் ஜொலிக்கின்றன
ஏரியில் எண்ணைக் கழிவில்
பாலித்தீன் பைகள்
மிதக்கின்றன...
செயற்கைக் குளிர்
இல்லையென்றால்
செத்துப்போவோமென்ற
சித்தாந்தம் ஒலிக்கிறது!

இவைகளில் ஒவ்வொன்றோடும்
இரண்டறக் கலந்துவிட்ட
நாமும் நிச்சயமாக
இருநூறு ஆண்டுகள்
கழித்து
இருக்கமாட்டோம்!

'இங்கே மனிதர்கள்
இருந்தார்கள்'
என்ற
கல்வெட்டைச் சுமக்கும்படி
காலத்தைப் பணித்தவர்கள்
பட்டியலில்
நமது பெயர் இருக்கும்!

அறிவில்லாதவர் கணக்கு

செருப்புப் போட மறுக்கும்
சிறுமியை
'இந்தக் காலத்தில்
இப்படி யாரும்

இருப்பார்களா?' என்றவாறே
கையில்

பேனாவைக் கொடுத்து
வீதியில் நிறுத்தி
'செருப்பில்லாமல் வருபவர்கள்
எண்ணிக்கையைக் குறித்து வை' என்றேன்...
சற்று நேரத்தில்

வந்து பார்த்தபோது
பாதையில்

பூஞ்செடியின் தளிர்களைக்
கிள்ளியெறிந்து கொண்டிருந்தவளை
'அறிவில்லை உனக்கு?'
எனத் திட்டிச் சென்றேன்...
அரைமணி நேரம் கழித்து வந்து
'ம்ம்.. எத்தனை பேர்?' என்றேன்
'இருபத்தாறு' என்றாள்
'அட, இவ்வளவா?' என்றேன்
'இது அறிவில்லாதவர்கள் எண்ணிக்கை' என்றாள்!

நன்றி : கீற்று.காம்

Sunday, January 3, 2010

நாய்கள் மொழி!

மனிதர்கள்
**************************************
கால்சட்டைப்பையில்
கற்களை நிரப்பிக்கொண்டு
காலையிலிருந்து அலைகிறான்
சிறுவன் ஒருவன்
குருவியைத்தேடி...
அவனது இலக்கு
பச்சோந்தியாக இருந்திருந்தால்
ஊரில் இழவுகள்
பல விழுந்திருக்கும்!

நாய்கள் மொழி!

**************************************
பசியென்று
சோறுகேட்டு வந்தவனிடம்
எதுவும் இல்லையென்று மட்டுமே
சொல்ல முடிந்தது
மனிதர்களால்...
வீதி நாய்கள் தான்
குரைத்துச் சொல்லின
'உன் அழுக்குச் சட்டை
கிழிந்திருக்கிறது' என
--நாவிஷ் செந்தில்குமார்

நன்றி : வார்ப்பு.காம்