Thursday, September 9, 2010

ஆனந்த விகடனில் வெளியான கவிதை

உணவே மாத்திரை
*****************************************
'இரண்டு நாளா
மூட்டுவலி, காய்ச்சல்
அடிக்குது...
ஒரு மாத்திரை இனாமாகக்
கொடுப்பியா தம்பி?' என்றாள்
பிள்ளைகளால் கைவிடப்பட்ட
லட்சுமிப் பாட்டி.

'ஆகாரத்துக்குப் பின்
ஒரு நாளுக்கு
மூன்று வேளை...'
எனச் சொல்லி
கொடுத்தார்
மருந்துக்கடை ராசு அண்ணன்.

'நாளுக்கு ஒரு வேளையென
மூன்று நாளுக்குத்
தின்னலாமா?' எனப்
பரிதாமாகக் கேட்டாள்
பாட்டி!

(நன்றி: ஆனந்த விகடன்)
00
அவனுக்கு இன்னொரு பெயரும் உண்டு
********************************************
சித்தாள் வேலை செய்கிற
அவனை
கொத்தனார், தச்சர் உள்ளிட்ட
வீட்டு வேலை பார்ப்பவர்கள்
'டே.. ஊமையா...' என்றுதான்
அழைப்பார்கள்.

மதியச் சாப்பாட்டிற்குப் பிறகு
ஓய்வெடுக்கும் போது
வீடு கட்ட
குவிக்கப்பட்டிருக்கும் மணலில்
'ராமு' என்ற தன் பெயரை
எழுதி
கொஞ்சநேரம் வெறித்துவிட்டு
அழிப்பான் அவன்.
--நாவிஷ் செந்தில்குமார்