Monday, December 28, 2009

கண்டதைச் சொல்லுகிறேன்

இருவருக்கிடையேயான
வாள்வீச்சு
காயமின்றி முடிந்ததெனச்
சொல்கிறார்கள்...
பிரபஞ்சத்தின் வெளிகள்
வெட்டப்பட்டு
வழிந்துகொண்டிருக்கிறது
இரத்தம்

தன்னையுரசிச் சென்ற
பசுமாட்டை
'எருமைமாடு' எனத்
திட்டியவனைப் பார்த்து
'ம்ம்ம்ர்ரூ' என்றவாறு
நகர்ந்தது மாடு...
அவ்வார்த்தையை
குருடனென மொழிபெயர்த்தேன்

அடுக்குமாடி குடியிருப்பில்
விரகதாபத்தைக்
கொத்தித்தின்கின்றன
அருகிலுள்ள வீடுகளின்
கலவிச்சப்தங்கள்...
விரிசலடைகின்றன
விதவையொருத்தியின்
படுக்கையறைச்சுவர்கள்

நூற்றியிருபது கேட்ட
கடைக்காரனிடம்
நூறு தருவதாகச் சொல்கிறான்
வாங்க வந்தவன்...
பேரம்படியாமையின் கணங்களில்
நீள்கிறது
கறிக்கோழியொன்றின்
வாழ்க்கை

பெண்ணொருத்தியின்
ஜாக்கெட்டிலிருந்த
ஜன்னலின் வடிவம்
இந்திய வரைபடம்போலிருந்தது...
தமிழகமிருக்கிற
பகுதியிலிருந்த மச்சத்தை
சென்னையெனக் குறித்ததும்
மீள்கிறது பார்வை
நன்றி : உயிரோசை.காம் மற்றும் திண்ணை.காம்

கூடல்பொழுதில் கசியும் கானல்நீர்

இரட்டைக்குழந்தைகள்
ஆணொன்று
பெண்ணொன்றுமாய்
வேண்டுமென்கிறாள்
வெற்றுமார்பில்
விரல் நகர்த்திக் கோலமிடும்
மனைவி
00
இருந்தால் ஆபத்தென்பதால்
குடல்வால்
அறுவைச்சிகிச்சையெனச் சொல்லி
கர்ப்பப்பையை
அகற்றிவிட்ட கதை
அறியாதவளிடம்
'சரி'யெனச் சமாளிக்கிறான்
கணவன்
00
வெறுமை பரவிய
படுக்கையறையில்
ஏதுமறியாதவளின்
கனவுகள் விரிய
எதார்த்தம் தெரிந்துகொண்டவனின்
கண்களில் குருதி வழிய
இனிவரும் இரவுகளில்
அவளது ஆண்மை
இவனைப் புணரும்
இவனது பெண்மை
கருவுற்ற நெஞ்சிலே
குழந்தையைச் சுமக்கும்!

நன்றி : திண்ணை.காம்

Thursday, December 24, 2009

நடைவண்டி

01.
நடைவண்டி
-----------------
அண்ணனுக்குப் பிறகு அக்காவை
அவளுக்குப் பிறகு என்னையும்
நடக்க வைத்ததை
அண்ணனின் பிள்ளைக்குதவுமென
வைத்திருந்தாள் அம்மா...
அவனோ
புதியதாய் ஒன்றை வாங்கிவிட
யாருக்கும் தெரியாமல் ஒருநாள்
விறகாக்கிவிட்டாள் அண்ணி!
யாரேனும் இப்போது
ஏற்றிவிட்ட ஏணி பற்றிப் பேசினால்
நடக்க உதவிய நடைவண்டி
நினைவுக்கு வருகிறது...


02.
மனைவி பற்றிய கவிதைகள்
-------------------------------------
நாய் பற்றிய
கவிதையைப் படிக்கிறபோது
எனக்குப் பிடித்த மாதிரியாக
நாயொன்றை
உருவகப்படுத்திக்கொள்கிறேன்...
இவ்வாறே பிற
கவிதைகளை வாசிக்கிற போதும்
அவையொத்த பிம்பம்
மனவெளியில்
மிதந்து செல்கிறது
'இந்தச் சாயல்
இன்னொருவன் மனைவியுடையதாக
இருக்கக் கூடுமோ?'
என்ற கேள்வியால்
மனது லயிப்பதில்லை
மனைவி பற்றிய கவிதைகளில்...

நன்றி : வார்ப்பு.காம்

Wednesday, December 23, 2009

முன்னாள் சிநேகிதிகள்

போன வருடம்
பூங்கொத்துடன் வாழ்த்துச் சொன்ன
தோழி ஒருத்திக்கு
இந்தப் பிறந்தநாளில்
இருக்கேனா? செத்தேனா?
எனத் தெரியவில்லை...

அடுத்த கவிதைத் தொகுப்பின்
முதல் பிரதி தனக்கே
வேண்டுமெனச் சொன்ன
முப்பது தோழிகளும்
முகவரியைத் தொலைத்திருந்தார்கள்...

மூன்று வேளைகளும்
'சாப்பிட்டாயா?' என
குறுந்தகவலில் குடைச்சல் தந்த
தோழியின் அலைபேசிக்கு
அழைக்கிற போதெல்லாம்
அணைத்துவைக்கப்பட்டிருப்பதாகச்
சொல்லப்படுகிறது...

என் மகளை தன் மகனுக்குக்
கேட்பேன் எனச் சொன்ன
தோழியொருத்தி
அவள் திருமணத்திற்கே என்னை
அழைக்கவில்லை!

திருமணத்திற்குப் பிறகு
தற்செயலாகச் சந்தித்த
தருணமொன்றில் தோழியொருத்தியிடம்
கோபித்துக் கொண்டேன்...
அவளோ
'அவர் சரி, அத்தை மாமாவிடம்
சிநேகிதனொருவன் இருந்தானென
எப்படிச் சொல்வது?' என்றாள்...
இருந்தானில் இறந்து போயிருந்தது
எங்கள் நட்பு!

இரு மனங்களை இணைப்பதாகச்
சொல்கிற திருமணம்
எத்தனை எத்தனை
நட்பின் இதயங்களைப்
பிரிக்கிறதோ?

பெண்களை நம்புகிற
நட்பையும் நம்புகிற என்னால்
இப்போதெல்லாம்
இன்னொரு ஆணால்
தீர்மானிக்கப்படுகிற
பெண்களுடைய நட்பை
நம்ப முடியவில்லை!

ஏதோ உறுத்த முதன்முதலாக
மனைவியிடம் கேட்டேன்...
'நீயாவது சிநேகிதர்களுடன்
தொடர்பில் இருக்கிறாயா?'
அவள் விடுத்த பெருமூச்சு
தன் கொடிய வெப்பத்தால்
நானறிந்த மொழியொன்றில்
பெண்களின் வாழ்க்கையை
எழுத முயன்று
மூலையைத் தேடி முடங்கியது...
நன்றி : திண்ணை.காம்

Monday, December 14, 2009

விநாயகமுருகனின் "கோவில் மிருகம்" கவிதைத் தொகுப்பு

வலைப்பூ வந்த பிறகு, தனியொரு மனிதனின் ரசனைக்குட்பட்ட கரிசனத்திற்காகக் காத்திருக்கும் காலம் போயே போய்விட்டது. எண்ணத்தைக் கடைக்கோடி வாசகனுக்குக் கொண்டு போவதற்குப் போடப்பட்டிருந்த கனத்த பூட்டு உடைக்கப்பட்டுள்ளது. எனவேதான் , இணையமென்னும் பெருவெளியில் பற்றிப் படர்ந்து கிடக்கின்றன ஏராளமான கவிதைகள். அப்படி எழுதிவந்த விநாயக முருகனுக்குள்ளே முகிழ்த்திருக்கிறது, தன் கவிதைகளைத் தொகுத்துப் புத்தகமாகத் தரவேண்டுமென்ற எண்ணம். அதன் விளைவுதான், இந்தக் "கோவில் மிருகம்" என்னும் கவிதைத் தொகுப்பு.
வலைப்பூவை வாசிக்கிற வாசகனின் மனநிலையும், கவிதைத் தொகுப்பை வாசிக்கிற வாசகனுடைய மனநிலையும் வெவ்வேறான அலைவரிசையிலிருக்கும். அவர்களின் நாடி பிடித்தறிகின்றவன் வெற்றி பெறுகிறான். அந்த வித்தை விநாயக முருகனுக்கு கை வந்த கலையாய் இருக்கிறது. ஒரு தொகுப்பின் கடைசிப் பக்கம் வரை அழைத்துச் செல்கிற அபார சக்தியை முதல் நான்கு அல்லது ஐந்து கவிதைகள் பெற்றிருக்க வேண்டும். இல்லையேல், நல்ல கவிதைகள் கூட நிராகரிக்கப் படுகின்ற அபாயமிருக்கிறது.

அந்தப் பணியை விநாயக முருகனின் ஆரம்பக் கவிதைகள் செம்மையாய்ச் செய்திருக்கின்றன. மனிதகுலத்தின் ஆளுமையின் கீழ் மரித்துப் போன பிற உயிர்களின் சுதந்திரத்தை, "மீன் தொட்டிகள்" என்ற கவிதையின் மூலம் பேசுகிறார். கோல்டன் மீன் அழகென்று வளர்க்கின்றவன் வீட்டுக் குழம்பில் குளத்து மீன் கு(கொ)திக்கிற உண்மை இந்தக் கவிதையில் விளங்குகிறது. பிற உயிர்கள் மீது காட்டும் பிரியம், கருணை எல்லாம் இவர்கள் போடும் ஒரு விதப் பிச்சை.
மீன் தொட்டியின் விபரங்களை விளக்கிக் கொண்டே வருகிற கவிதையை, இப்படி முடிக்கிறார்.
"எல்லாம் சரி
மீன்களுக்கும் இந்தத் தொட்டி
பிடிக்குமென்று சொன்னதுதான்
எனக்குக் குழம்புகிறது"


ரிமைன்டர் வைத்து பிறந்தநாள் வாழ்த்துச் சொல்கிற கலாச்சாரச் சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதை, எந்திரத்தனமான வாழ்க்கைமுறையை
"இரண்டு கைகளைக் கூப்பி
தலையை லேசாகக் குனிந்து
புன்னகையோடு வரவேற்ற
பெண்ணொருத்தி
பொம்மையென்று
சற்று தாமதித்தே
உணர முடிந்தது"

என்ற கவிதை மூலம் உணர்த்துகிறார்.

பாட்டியின் இறப்பைப் பற்றிய கவிதையில், கூட்டுக் குடும்பங்கள் சிதைந்துவிட்ட நிலையில் பெரியவர்கள் இருந்தாலும் இறந்தாலும் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை மறைமுகமாகக் கூறுகிறார். கடமையைக் கூடச் சுமையாக நினைக்கிற முகமூடி மனிதர்களுக்கென சில கேள்விகளை வைத்திருக்கிற "விடுமுறை" என்ற இந்தக் கவிதை
"பத்து மணி நேரத்தில் முடிந்தது
அடுத்த நாள் திங்கட் கிழமை
அலுவலக தினம்
அதிகம் சிரமம் தரவில்லை பாட்டி"

என முடிகிறது.

ஆண் பெண் நட்பு சகசமாகிப் போன நிகழ்காலக் கட்டத்தில், இயற்கை உபாதை பற்றிக் குறிப்பிட இன்னொரு சொல்லின் தேவை இருக்கிற சங்கடத்தை "மகளிர் மட்டும்" என்ற கவிதை பாடுகிறது. மேலும் மாதவிடாய் தருணத்தில் இருக்கிற பெண்ணொருத்தி வலியின் கொடுமையால் ஏதோவொரு வார்த்தை சொல்லிவிட, அலுவலகத்தில் சக ஊழியன் அவளை "சிடு மூஞ்சி" என எளிமையாய்ப் பெயர் வைத்துவிடுகிற கொடுமையின் உச்சத்தை உணர்த்துகிறது.

கவிதைத் தொகுப்பின் தலைப்புக் கவிதை, எல்லாச் செயலுக்கும் எதிர்வினையுண்டு என்ற நிதர்சனம் அறியாமல், அதிகாரம் செய்கின்ற வர்க்கத்தைச் சாடுகிறது.
"காட்டுப்பாகனொருவன்
நம்பி உறங்குவது
கோவில் மிருகத்தின்
காலடி நிழலில்"

பூமியின் காலடியில் எந்த நம்பிக்கையில் உறங்கிக் கொண்டிருக்கிறோம்? என்ன செய்யக் காத்திருக்கிறது நம்மை?

அன்றாட வாழ்வில் ஆங்காங்கே கொட்டிக்கிடக்கிற நிகழ்வுகளைக் கவிதையாக்கித் தொகுத்திருக்கிறார். வாசகர்களை வாசகர்களாகவே விட்டுவிடாமல், அவர்களும் கவிதை எழுதலாம் என்ற தோழமை உணர்வை உண்டு செய்கின்றது ஒவ்வொரு கவிதையும். கவிதைகளைப் படித்து முடித்தபின் கனமான பின்அட்டையை கட்டை விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் இடையே வைத்து கசக்கி, இனி பக்கங்களேதுமில்லை என்று அறிகிறபோது, இன்னும் சில பக்கக் கவிதைகளைத் தந்திருக்கக் கூடாதா? என்ற ஏக்கம் தோன்றுவது இவருக்கும், இந்தக் கவிதைத் தொகுப்பிற்கும் கிடைத்த வெற்றி!
முடிவற்றுச் சுழலும் காலச்சக்கரத்தில் குறிப்பிடத்தக்க ஆரங்களாய் விளங்கும் கவிஞர்களோடு, தனது கவிதைத் தொகுப்பின் மூலம் தன்னையும் இணைத்துக் கொள்கிறார். வினய்க்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
நட்புடன்,
நாவிஷ் செந்தில்குமார்.