Thursday, July 22, 2010

சதுரமான செவ்வகம்

சதுரமான செவ்வகம்
****************************
ஏதோவொன்றை வரைந்துவிட்டு
இதுதான்
சதுரமென்றாள் அனைகாகுட்டி
இல்லவே இல்லை
இப்படித்தான் இருக்கும்
சதுரமென்றேன்
ஏற்றுக்கொள்ளாதவளாக
இப்படியும் இருக்கலாம்
சதுரமென்றாள்...
இங்கே எல்லாம் அதுவாகவே
இருப்பதில்லை என்பதாலும்
குழந்தைக்காக சதுரமே
வளைந்துகொடுக்கத் தயாராக
இருப்பதாலும்
இதுவும் சதுரம்தான் என்ற
முடிவுக்கு வந்தோம்!
00
சிதைவுகள்
****************************
ஆறு குளங்களை
வரையச் சொன்னபோது
அவ்வளவு நேர்த்தியாக
அடுக்குமாடிக் குடியிருப்புகளை
வரைந்துமுடித்தாள்
அனைகாகுட்டி!
00
வேஷம்
****************************
நாலுவயதுக் குழந்தையின்
பிறந்தநாள் விழாவிற்கு சென்றிருந்தேன்...
டாக்டர், வக்கீல் போன்ற
உடைகளை வாங்கிவந்திருந்த
விருந்தினர்கள்
ஆசையோடு அணிவிக்க அணிவிக்க
எல்லாவற்றையும் களைந்துவிட்டு
மீண்டும் மீண்டும்
குழந்தையாகவே நின்றது!
--நாவிஷ் செந்தில்குமார்

Monday, July 5, 2010

தொடர்பில்லாதவை

மூங்கில்களற்ற காடொன்றில்
புல்லாங்குழல் தேடி அலைந்து
களைத்துப் போகிறது
காற்று

கொட்டும் மழையில் நனைந்ததாலே
குரல் மாறிப் போனது...
நான் குயில்தான் எனச்
சத்தியம் செய்தது
காக்கையொன்று

முழுதும் சுவைத்தபின்
தூக்கி எறிந்தவனுக்கும்
தெரியாமல்
யாரோ சிலருக்கென
கனிகளை ஒளித்துவைத்திருக்கிறது
மாங்கொட்டையொன்று

காலுக்கு
புதுச்செருப்புப் போட்டு
கண்ணாடியில்
முகம் பார்த்தேன்
அழகாய்த் தெரிந்தது!

உண்ணுகிற
ஒவ்வொரு பருக்கையிலும்
தன் பெயர் இருப்பதாகச்
சொல்கிறவன்
தட்டில் மீதம் வைக்கிற
பருக்கைகளிலிருந்து
எவனோ ஒருவன்
பெயரை அழிக்கிறான்!


நன்றி : திண்ணை.காம்

Saturday, July 3, 2010

மூன்று கவிதைகள்

விளையாட்டு
********************************
பேருந்து வரத்தாமதித்த
ஒவ்வொரு கணத்தையும்
நிறுத்தத்தில் காத்திருந்த
பள்ளிச்சிறுமியின் மீது
வீசி விளையாடிக்
கொண்டிருந்தேன்.
00
பிம்பத்தின் மரணம்
********************************
மாலைப் பொழுதொன்றின்
நிசப்தத்தில்
பேரிரைச்சலுடன் ஏதோவொன்று
கிணற்றில் விழுந்தது
ஓடிச்சென்று பார்ப்பதற்குள்ளான
சில கணங்களின்
தாமதத்தில்
ஆடி ஆடி மிதந்துகொண்டிருந்தது
எனது பிம்பம்.
00
ருசி
********************************
அதிகம் ருசியில்லாத
இட்லிக்கடையில் சாப்பிட
அடிக்கடி
அழைக்குமென்னைத்
திட்டுகிற
நண்பனுக்குத் தெரியாது
அக்கடைக்காரப் பெண்மணிக்கு
என் அம்மாவின் சாயல்
இருப்பது!

--நாவிஷ் செந்தில்குமார்