Saturday, January 17, 2009

ஒரு தாயின் கடிதம்

பேர் சொல்ல நான் பெத்தவனே
பெரிய படிப்பெல்லாம் முடிச்சு
வேலை தேடப் போனவனே!
நீ போயி மாசமென்னமோ
எட்டுதான் ஆச்சு
எனக்கு அது
மகாமகமா கழிஞ்சாச்சு!
ஓலையில எழுதும்படி
ஒண்ணுமேயில்ல
ஒன் நெனப்புனால மட்டுந்தான்
எழுதுறேம் புள்ள

பசு மாடு நேத்துதானே
கன்னு போட்டுச்சு!
சீம்பால பீச்சிறப்ப
ஒன் நெனப்பு வந்து
கண்ண கசக்குச்சு
மேட்டுக் காட்டுல சோள கருது
நல்லா வெளஞ்சுச்சு
கம்மாயில தண்ணி இல்லாம
சருகா பட்டிடுச்சு

உனக்கான அத்தமவ
பரிமளத்துக்கு தேதி குறிச்சாச்சு
அரசாங்க உத்தியோக மாப்புள்ள
அவங்க மனச மாத்திபுடுச்சு
எலித்தொல்ல நம்ம வீட்ல
இப்ப இல்லவே இல்ல
வயித்துப் பசி போக்க
அவை எல்லாம் நம்ம வீட்டு
அடுப்புல வேகுதுல்ல

மூத்தவளுக்கு வரன் கேட்டு
தரகர் வந்தாரு
கொழுத்த சொத்துள்ள
எடமுன்னு சேதி சொன்னாரு
என்ன ஒண்ணு
ரெண்டாம்தாரமாத்தான்
வாக்கப்பட வேணுமுன்னாரு
வறுமையும் அவ வயசும்
சரின்னு சொல்ல வைச்சிடுச்சு
சின்னவ வாங்கின மார்க்கு
தொள்ளாயிரத்து மூணு
'என்ன கல்லூரியில சேத்து விடு' ன்னு
பாடாப் படுத்துறா நின்னு
ஒப்பனுக்கு குடிப்பழக்கம்
இப்ப இல்ல கண்ணு
எப்படி சொல்வேன்
வித்துக் குடிக்க ஒண்ணுமில்லேன்னு
நிப்பாட்டிட்டாகன்னு

இது கேட்டு நீ ஒண்ணும்
வருத்தப்பட வேணாங்கன்ணு
லட்சியத்தில் நீ ஜெயிக்கணும்
நெலயாய் நின்னு
வெதநெல்ல வித்து பணம்
அனுப்பி வச்சிருக்கேன்
வாங்கி நீ வேளைக்கு சாப்புடு
தோதுபாத்து செலவு செஞ்சு
நாளக் கடத்திடு
தீர்ந்துபோனா கடுதாசி போடு
தாலிமணி வச்சிருக்கேன்
வித்தனுப்பறேன்

தவறான எண்ணம் வேண்டாம்
தளராத தன்னம்பிக்கையால
நம் தலைமொறையின்
தலையெழுத்த மாத்தி எழுது!

செத்தேன்னு சேதி வந்தா
கொஞ்சம் அழுவு
பொறகு எல்லாமே சகசமுன்னு
மொகத்த கழுவு
வேல ஒண்ணு கெடச்சவுடனே
ஓடி வந்து ஏஞ் சமாதியில
சாஞ்சுபடு
அந்த சந்தோசச் சேதிய
என் காதுல சத்தம் போடு...

--நாவிஷ் செந்தில்குமார்

11 comments:

Anonymous said...

Really Superb.

Senthilkumar said...

நன்றி ரகுமான்..

Anonymous said...

அன்பின் நாவிஷ்.. தாயின் கவிதை..
படிக்க படிக்க கண்களில் நீர் கசிந்த இந்த நிமிடங்களில்..உங்களின் வரிகள் இத்தனை வலியோட அமைந்த அந்த நிமிடங்களை நினைத்து வருந்துகின்றேன்..

படிப்பவனுக்கே இந்த வருத்தம் என்றால்.. படைத்தவனுக்குள் எத்தனை வருத்தம் இருந்திருக்கும்..

என் வலையும் உங்கள் வருகையினை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றது நண்பரே... அன்புடன் இளங்கோவன்.

priyamudanprabu said...

//
செத்தேன்னு சேதி வந்தா
கொஞ்சம் அழுவு
பொறகு எல்லாமே சகசமுன்னு
மொகத்த கழுவு
//

அய்யா
வாழ்த்த வர்த்தைகள் இல்லை

Senthilkumar said...

நன்றி இளங்கோ மற்றும் பிரபு அவர்களே.. தொடர்ந்து வாசியுங்கள்..

செந்தில் நாதன் Senthil Nathan said...

Nalla eluthiruka.. Parata vartahikalai tharamal tamil ennai emarukirathu...

சுந்தரா said...

நாவிஷ், உங்களுக்கு ஒரு விருது இங்கே...

http://kurinjimalargal.blogspot.com/

David Padma said...

உங்கள பிள்ளையாய் பெத்த உங்களுடய தாயின் உணர்வ நீங்க புரிஞ்சிகிடிங்க நான் என்ன செய்யணும் சொல்லுங்க காத்துகிட்டு இருக்கேன்

David Padma said...

உங்கள பிள்ளையாய் பெத்த உங்களுடய தாயின் உணர்வ நீங்க புரிஞ்சிகிடிங்க நான் என்ன செய்யணும் சொல்லுங்க காத்துகிட்டு இருக்கேன்

Senthilkumar said...

//உங்கள பிள்ளையாய் பெத்த உங்களுடய தாயின் உணர்வ நீங்க புரிஞ்சிகிடிங்க நான் என்ன செய்யணும் சொல்லுங்க காத்துகிட்டு இருக்கேன்

நன்றி நண்பரே!
என்னால் என்ன சொல்லிவிட முடியும்?

Palanivel said...

கண்ணீர் கசியவைத்த கவிதை...
அருமை