வெள்ளந்திகள் போல
பச்சோந்திகள் பல
நடமாடும் காலம்...
துண்டைப்பார்த்து
துளியும் ஏமாற வேண்டாம்!
வண்ணங்கள் வேறானாலும்
அவர்கள் தம்
எண்ணங்கள் ஒன்றேதான்!
கூட்டணி சேர்ப்பில்
கொட்டியிரைக்கப்படும் பணம்
கொடுத்துச் சிவந்த
வாங்கிப் பழுத்த
கரங்கள் குலுக்கிக்
கொண்டிருக்கும்
வண்ணச்சுவரொட்டிகள்
இனி
வழி நெடுகிலும்...
தொகுதிப் பங்கீட்டிலிருந்து
தொடங்கிவிடும்
குழாயடிச் சண்டை...
விளக்கெண்ணை விட்டு
விழிகளைத் தயார் செய்யுங்கள்
காணவேண்டியிருக்கும்
ஏராளமான அவலங்களை...
யாகம் வளர்க்கின்றனர்
அரசியல்வாதிகள்
தூபம் போடுவார்கள்
தீயிறங்க...
தகுதியில்லாதவனுக்கு
வரமாய்ப் போகின்ற
வாக்குதான்
உங்களுக்குச் சாபமாய்
விழுகின்றது!
இலவசங்களுக்கு
இரையாகிப் போகாதீர்கள்!
தாயன்பு தவிர்த்து
ஏனைய இலவசங்களுக்கு
இங்குண்டு
ஏதேனும் ஒரு
மிகப்பெரிய விலை!
மௌனங்கள்
கோர்த்துக் கோர்த்து
மாலையாக்கியது போதும் - அது
அப்பாவிகளின் வாழ்க்கையை
அலங்கரிக்காது ஒருபோதும்.
அடுத்தமுறை தவறு செய்ய
யோசிக்கும்
அடிவாங்கும் மாடு - இதை
அறியாது போனால் நாம்
அதனிலும் கேடு.
இந்த முறை தருவோம்
சரியான சவுக்கடி
இதைச் சொல்லவேண்டும்
உங்கள் மனம் அடிக்கடி...
இரண்டாவது வார்த்தையில் இறந்துபோனவன்
13 years ago
5 comments:
//இலவசங்களுக்கு
இரையாகிப் போகாதீர்கள்!
தாயன்பு தவிர்த்து
ஏனைய இலவசங்களுக்கு
இங்குண்டு
ஏதேனும் ஒரு
மிகப்பெரிய விலை!//
இந்த வரிகள் அருமை
தங்களின் வருகைக்கு மிக்க நன்றி
ஆ.முத்துராமலிங்கம்...
ரொம்ப யதார்த்தம்.. கவிதை வார்த்தைகளில் சமூக கேடுகளை களைய வேண்டும் என்ற அக்கறை.....
மிக அருமையான கவிதை நாவிஷ்!
வாழ்த்துக்கள்!
வண்ணங்கள் வேறானாலும்
அவர்கள் தம்
எண்ணங்கள் ஒன்றேதான்!///
நன்றாக இருக்கிறது இந்த வரிகள்!
மிக்க நன்றி ஷீ-நிசி
Post a Comment